வறுமையின் பிடியில் நாஞ்சில் சம்பத்: மகனுக்கு ஃபீஸ் கட்டக் கூட பணம் இல்லை
Recommended Video

சென்னை: 40 ஆண்டுகளாக அரசியலில் இருந்த நாஞ்சில் சம்பத் படும் கஷ்டம் குறித்து தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது.
அப்பொழுது ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது,

வெற்றி
சமூக அக்கறையுடன் எல்கேஜி படத்தை எடுத்துள்ளோம். இந்த படத்தால் காசு வருமா என்று தெரியாது. ஆனால் 3 மாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் ஒரு 10 பசங்க ஓட்டு போடும் முன்பு 10 நிமிடம் யோசித்தால் அதுவே பெரிய வெற்றி.

பெரிய ஆள்
நான் சாதாரண மிடில் கிளாஸ் பையன். எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். ஃபீஸ் கட்ட கஷ்டப்பட்டிருக்கிறோம். நான் சாதராண பையன். இந்த படத்திற்காக எதிர்ப்பு எதுவும் வரவில்லை. யாரும் மிரட்டவில்லை, கொலை மிரட்டல் விடுக்கவில்லை. என்னை யாரும் ஏன் மிரட்டவில்லை என்றால் நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை. நான் அஜித் சார் இல்லை, விஜய் சார் இல்லை, ரஜினி சார் கிடையாது, கமல் சார் கிடையாது.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் இன்னோவா கார் வாங்கிவிட்டார். கார் வாங்கிய பிறகு கட்சியை மாற்றிவிட்டார் என்று நிறைய மீம்ஸ் பார்த்திருக்கிறோம். என் அப்பாவாக நடிக்க அதுவும் ஒரு அரசியல்வாதியாக நடிக்க ஒரு ஆள் வேண்டும் என்றதுமே அவர் நினைவு தான் வந்தது. பட்டினபாக்கத்தில் ஹவுசிங் போர்டில் 600 சதுர அடியில் அவர் வீடு உள்ளது. அது தான் அவர் வீடு என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

ஃபீஸ்
நாஞ்சில் சம்பத்தை அவர் வீட்டில் சந்தித்து கதையை கூறி இந்த படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டேன். நான் நடிக்கிறேன், ஆனால் என் பையனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களா என்று நாஞ்சில் சம்பத் கேட்டார். அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 40 ஆண்டுகள் அரசியலில் இருப்பவர்கள் கல்லூரியே கட்டும் நேரத்தில் அவர் என் மகனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களா என்று கேட்டபோது கஷ்டமாக இருந்தது.
அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். எல்கேஜி வெளியான பிறகு அவர் பிசியாகி விடுவார். 40 ஆண்டுகள் அரசியலில் சம்பாதிக்காத அவர் சினிமாவிலாவது சம்பாதிக்கட்டும் என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.


Click it and Unblock the Notifications











