அவர் நடிப்பு என் எலும்பையே உருக்கி விட்டது... 'மீண்டும்' பட விழாவில் உருகிய நாஞ்சில் சம்பத்!
சென்னை: மீண்டும் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய நாஞ்சில் சம்பத் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நெட்டிசன் பட இயக்குநரான சரவணன் சுப்பையா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் மீண்டும். இந்தப் படத்தில் கதிரவன் மற்றும் அனகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் துயரத்தையும் கூறியுள்ளனர்.

மீண்டும் படத்தின் கதை..
மேலும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இந்தியா மீதான மறைமுக தாக்குதலையும் விஞ்ஞான ரீதியான தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு ஆகியோர் பங்கேற்றனர்.

எதிர் திசையில் பேசினார்..
இந்த நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, அனைவரையும் கலையால் வணங்குகிறேன் தமிழால் ஆராதிக்கிறேன். எனக்கு இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நேற்று முதலே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் சரவனன் சுப்பையா திருவள்ளூரில் நடந்த பட்டிமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் பேசினார்

உள்ளத்தில் விழுந்துவிட்டேன்
அன்றைக்கு அவர் மீது நான் கடும் கோபத்திலிருந்தேன். முரணான தகவலாக பேசுகிறாரே என்று எண்ணினேன். ஒருநாள் சந்திப்பில் அவர் உள்ளத்தில் நான் விழுந்திருக்கிறேன். நேற்று என்னை அழைத்த மாத்திரத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு கொடுத்தேன். அதேபோல் பி டி செல்வகுமார் கலப்பை அமைப்பு மூலம் பல குடும்பங்களுக்கு உதவியவர்.

எலும்பையே உருக்கிவிட்டது
மீண்டும் என்ற திரைப்படம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரவிருக்கிறது. அனகாவின் நடிப்பும், கதிரவன் நடிப்பும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது, என்னுடைய எலும்பையே உருக்கி விட்டது. மீண்டும் படத்தின் கதை அமைப்பு சமூக பிரச்சனை, சமகால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கின்றார் சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் படம் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சினிமாவால் முடியும்
சமூக நீதியை நோக்கி சினிமா நகர்ந்து வருகிறது என்று இன்றைக்கு செய்திக் கட்டுரை படித்தேன். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். எல் கேஜி படத்தில் நான் நடித்தபிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். மீண்டும் படம் பெரிய வெற்றி படமாக அமையும்... இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











