என் உயிர் உள்ள வரை உங்களை மறக்க மாட்டேன்.. வடிவேல் பாலாஜியை இழந்து வாடும் நாஞ்சில் விஜயன்
சென்னை: சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை உருக்குலைய வைத்தது.
நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் தினமும் வடிவேல் பாலாஜியை நினைத்து வாடி, அவருடன் இருந்த தருணங்களை பகிர்ந்து வருகிறார்.

மாரடைப்பு
மாரடைப்பு காரணமாக சின்னத்திரை கலைஞரான வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில தனியார் மருத்துவமனைகள் சரியான சிகிச்சை அளிக்காததே அவரது மரணத்திற்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். வடிவேல் பாலாஜியின் மரண செய்தியை அறிந்த பலரும், கொரோனாவை மறந்து விட்டு அவரது இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

கதறி அழுத நாஞ்சில் விஜயன்
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி, சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது ஷோவில் வரும் சிரிச்சா போச்சு செக்மென்ட் மூலம் பிரபலமானார். விஜய் டிவியில் பணியாற்றும் ஏகப்பட்ட திரைக் கலைஞர்களும் வடிவேல் பாலாஜியின் இழப்புக்கு கண்ணீர் விட்ட நிலையில், நாஞ்சில் விஜயனும் கதறி அழுதார்.

அழ வைத்துவிட்டாயே
மேலும், தினமும் தொடர்ந்து வடிவேல் பாலாஜியை நினைத்து வருந்தி வருகிறார் நாஞ்சில் விஜயன். எல்லோரையும் சிரிக்க வைத்தாய்.. இன்று எல்லோரையும் அழவைத்து சென்று விட்டாய் என அவருடன் செலவழித்த அழகிய தருணங்களை பகிர்ந்து வடிவேல் பாலாஜியின் நினைவால் வாடி வருகிறார்.

இனிமேல் யார் கூட ஆடுவேன்
மேலும், ஆசையை காத்துல தூதுவிட்டு என்ற பாடலுக்கு வடிவேல் பாலாஜி மற்றும் நாஞ்சில் விஜயன் இருவரும் இணைந்து சேலை கட்டி பெண் போல வேடமிட்டு, செம குத்து குத்தும் வீடியோவை வெளியிட்டு, இனிமேல் யார் கூட அண்ணா இப்படி ஆடுவேன் என பதிவிட்டு ரசிகர்களை மேலும், கண்ணீர் கடலில் ஆழ்த்தி வருகிறார்.

உயிர் உள்ளவரை
சுடிதார் அணிந்து கொண்டு பெண் வேடமிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக ரெடியாகி நிற்கும் வடிவேல் பாலாஜி உடன் இணைந்து எடுத்துக் கொண்ட மற்றுமொரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்து, "என் உயிர் உள்ளவரை நான் மறக்க முடியாத ஒரே மனிதர்" எனக் கூறி #ripvadivelbalaji என்ற ஹாஷ்டேக்கை போட்டு இரங்கல் தெரிவித்து வருகிறார். நாஞ்சில் விஜயனுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications