மகன் திருமணம் எதற்காக?.. மருத்துவர் சொன்னது இதைத்தான்.. மனம் திறந்த நெப்போலியன்.. ஹேட்டர்ஸ் கப் சிப்
சென்னை: நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம்தான் கடந்த சில நாட்களாக டாக் ஆஃப் டவுனாக இருக்கிறது. அவருக்கு இந்தத் திருமணம் தேவையில்லாத ஒன்று என்று ஒரு தரப்பினரும்; இந்தத் திருமணத்தில் என்ன தவறு இருக்கிறது என்று மறுதரப்பினரும் தொடர்ந்து பேசிவருகிறார்கள். இந்தச் சூழலில் நடிகர் நெப்போலியன் தனியார் யூட்யூப் சேனலான கலாட்டாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மகன் குறித்து பல விஷயங்களை பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. அந்த நோய்க்கான சிகிச்சைக்காக நெப்போலியன் தனது குடும்பத்துடன் சென்று அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு சென்ற அவர் 2000ஆம் ஆண்டே சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றை தொடங்கினார். அந்தக் கம்பெனியில் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்க்கிறார்கள். அதுமட்டுமின்றி பல்லாயிரம் ஏக்கர் அளவில் நிலம் வாங்கி அங்கு விவசாயமும் செய்துவருகிறார் நெப்போலியன்.

மகன் திருமணம்: நெப்போலியனின் மென்பொருள் நிறுவனத்தை அவரது மனைவி சுதாவும், மூத்த மகன் தனுஷும் கவனித்துக்கொள்கிறார்கள். CEOவாக தனுஷும், CFOவாக மனைவி சுதாவும் அந்தக் கம்பெனிக்கு பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக குழந்தை பெற்ற பிறகு எம்.பி.ஏ படித்தாராம் நெப்போலியனின் மனைவி சுதா. சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோரான நெப்போலியனும், சுதாவும் முடிவு செய்தார்கள்.
ஜப்பானில் திருமணம்: அதன்படி அக்ஷயா என்ற பெண்ணை பார்த்தார்கள். நிச்சயதார்த்தம் தமிழ்நாட்டில் நடக்க; திருமணம் மட்டும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. அமெரிக்காவில் இவர்களது திருமணம் நடப்பதில் சில சட்ட சிக்கல்கள் இருந்ததன் காரணமாக ஜப்பானில் அவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கான ஏற்பாடுகளை நெப்போலியன் தரமாக செய்திருந்தார்.
என்ன ஏற்பாடுகள்: அதாவது வந்தவர்களின் மனம் நோகாதபடி சகல வசதிகளும் உடைய ஹில்டன் ஹோட்டலில் அவர்களுக்கு ரூம் போட்டிருந்தார் நெப்போலியன். மேலும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து திருமணம் நடந்த இடத்துக்கு வருவதற்காக தனித்தனியாக வாகனங்களையும் ஏற்பாடு செய்திருந்தார் அவர். அது வந்திருந்த நட்சத்திரங்களை பெரும் திருப்திப்படுத்தியதாகவும்; திருமணத்தை முடித்து இந்தியா வந்தவர்கள் நெப்போலியனின் ஏற்பாடுகளை மெச்சிக்கொள்கின்றனர் என்றும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
நெப்போலியன் பேட்டி: இந்நிலையில் மகன் திருமணத்தை முடித்த கையோடு நெப்போலியன் தனியார் யூட்யூப் சேனலான கலாட்டாவுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தனுஷை நாங்கள் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது எங்களிடம் மருத்துவர்; 'தனுஷ் சந்தோஷமாக இருப்பதுதான் அவனுக்கு மிகப்பெரிய மருந்து. எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று சொன்னார். அன்றிலிருந்து தனுஷை சந்தோஷமாக வைத்துக்கொள்வதுதான் எங்களது நோக்கமாக இருந்தது.
ஏங்கிவிடக்கூடாது: அரசியலில் இருக்கும் சுகத்தை பார்த்துவிட்டு அதைவிட்டு யாராலும் வரமுடியாது. மீண்டும் மீண்டும் அதை அடைய வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் நான் எனது மகனை பார்க்கும்போது அதெல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. எனது பிள்ளைதான் பெரிதாக தெரிந்தான். அவன் வாழும் காலம்வரை எந்தவிதமான மன குறையும் இல்லாமல் வாழ வேண்டும். நம்மை இப்படி கவனிக்காமல் விட்டுவிட்டார்களே என்று சின்ன ஏக்கம்கூட அவன் பட்டுவிடக்கூடாது" என்றார். நெப்போலியனின் இந்தப் பேச்சை கேட்ட பலரும் ஒரு தந்தையாக நெப்போலியன் செய்தது முற்றிலும் சரிதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் ஹேட்டர்ஸோ கப் சிப் என்று ஆகிவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











