நெப்போலியன் மகனுக்கு அமெரிக்காவில் நடந்த திருமணம்.. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு ஜப்பானில் வைத்து கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. அவர் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க அமெரிக்காவில் வைத்து அவர்களது திருமணம் மீண்டும் நடந்தது. அதுதொடர்பான வீடியோவை நெப்போலியன் பகிர; பலரும் அந்தத் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட நெப்போலியன் பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் படத்திலேயே வித்தியாசமான கேரக்டரை ஏற்ற அவர் தொடர்ந்து ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்தார். அவர் நடித்த படங்களும், அவரது நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அதுமட்டுமின்றி அரசியலில் தடம் பதித்து ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நெப்போலியன்: அவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்தது. இந்தியாவில் அளிக்கப்பட்ட சிகிச்சை ஒத்து வராததால் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு தனுஷுக்கு தேவையான சிகிச்சை, வசதிகள் என அனைத்தையும் செய்துகொடுத்த அவர்; திருமணம் நடத்திவைக்கவும் முடிவு செய்தார்.

ஜப்பானில் திருமணம்: அதன்படி அக்ஷயா என்ற பெண்ணை பார்த்து பேசி முடித்தார்கள். அக்ஷயாவுக்கும் தனுஷை பிடித்துப்போனதால் ஜப்பானில் வைத்து திருமணம் நடந்தது. கடந்த வருடம் நடந்த திருமணத்தில் தமிழ் திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். சிவகார்த்திகேயன் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அவர்களது திருமணத்துக்கு செலிபிரிட்டிகள் மட்டுமின்றி ரசிகர்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்தார்கள்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: திருமணம் முடிந்து சுமூகமாக அவர்களது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் தனுஷுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை வெடித்து விட்டதாகவும்; அதனால் அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதை சமீபத்தில் நெப்போலியன் குடும்பம் உணர்த்தியது. இது ஒருபக்கம் இருக்க அமெரிக்காவிலும் இன்னொரு முறை தனுஷுக்கு திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் திருமணம்: அதன்படி அமெரிக்காவில் மீண்டும் அவர்களின் திருமணம் நடந்தது. இதில் நெப்போலியன் குடும்பத்துக்கு உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் கலந்துகொண்டார்கள். அக்ஷயா நீல நிற பட்டு புடவையும், தனுஷ் வெள்ளி வேட்டி சட்டையும் அணிந்திருந்தார்கள். அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்தத் திருமணம் நடந்தது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அன்பு நண்பர்களே , உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்...!
உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதிபெற்று நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துக்களோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி , எங்கள் மகன் தனுஷ்க்கும் & அக்ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது...! உங்களின் மேலான பார்வைக்கும் உங்களின் வாழ்த்துக்களுக்கும்..! நன்றிகள் பல கோடி" என கூறி அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











