இவர்களில் யார் அடுத்த பிரபுதேவா... ஸாரி.. அடுத்த 'மைக்' மோகன்???
சென்னை: உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்று ஒரு டிவியில் கச்சேரி வைத்து கலக்கினார்கள். அதே போல இவர்களில் யார் அடுத்த மைக் மோகன் என்ற ஒரு சிந்தனையோட்டம் வந்ததின் விளைவு இந்த ஸ்டோரி...
ஆனால் எத்தனை பேரை சிந்தித்தாலும், மனசு என்னவோ ரிவர்ஸ் கியர் போட்டு மறுபடியும் மறுபடியும் ஒரே நபர் மீதுதான் விழுந்து எழுகிறது.
அவர்தான் 'நாசா' என்று செல்லமாக அழைக்கப்படும் புதுச்சேரி நாராயணசாமி. ஆமாங்க, மத்திய இணை அமைச்சர்தான்.

மைக்கும், மோகனும்..ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஒரு காலத்தில் அதாவது 80களிலும், 90களின் தொடக்கத்திலும் மைக்கும் கையுமாக திரிந்தவர் மோகன்.

முழுங்கிடாமப்பா.. சூதானமா
மைக்கை இவர் பிடிக்கும் ஸ்டைல், வாய் அருகே வைத்து அதை மிருதங்கம் போல பாவித்து விளையாடும் விளையாட்டு, தூக்கிப் போட்டு பிடிக்கும் அலேக் ஸ்டைல்.. கன்னத்தில் குழி விழ கண்களை உருட்டி, உருட்டி சிரிக்கும் சிரிப்பு... எல்லாமே ஓஹோஹோண்ணானாம்!.

பாவம்யா ராசய்யா...!
ஆனால் இளையராஜா என்ற ஒரே ஆத்மாவுக்காத்தான் இவரது பாடல்களையும் பார்க்க முடிந்தது மக்களால்.. நல்ல வேளையாக பாடல்களை மட்டும் பட்டையைக் கிளப்பும் வகையில் ராஜா போட்டிருக்காவிட்டால் மைக்கையும் பார்த்திருக்க முடியாது, மோகனையும் மெனக்கெட்டு ரசித்திருக்க முடியாது...

அவருக்குப் பதில் இனி இவர்...!
டிவி சீரியல்களில் ஒரு கார்டு பார்த்திருக்கலாம். அதாவது இவருக்குப் பதில் இனி இவர் என்று. அந்த கார்டை இப்போது நாராயணசாமிக்குப் போட வேண்டிய நிலைக்கு நம்மைக் காலம் கடத்திக் கொண்டு வந்துள்ளது.

எல்லாமே ஏர்போர்ட்டில்தான்...
எப்பப் பார்த்தாலும் ஏர்போர்ட்டில், அதுவும் சென்னை ஏர்போர்ட்டில் நின்றபடிதான் நிறையவாட்டி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் நாராயணசாமி.

மோகனுக்கு ராசா.. சென்னை ஏர்போர்ட்டுக்கு 'நாசா'...!
சென்னை விமான நிலையத்தில் ஏரோபிளேனுக்கு அடுத்து அதிக அளவில் பார்க்கக் கூடிய ஒரு விஷயம் எதுவென்றால் அது நிச்சயம் நாராயணசாமிதான். எப்பப் போனாலும் பார்க்கலாம் என்று கூறக் கூடிய அளவுக்கு சாரை ஏர்போர்ட்டில் அடிக்கடி பார்க்கலாம்.

பிடித்த எண் 15...
நாராயணசாமிக்கு பிடித்த எண் 15 என்று கூட பலர் கிண்டலாக டபாய்க்கிறார்கள். காரணம், கூடங்குளம் அணு மின் உலை எப்போது இயங்கும் என்ற கேள்விகளுக்கு இவர் பெரும்பாலும் 15 நாள் என்று பதிலளித்ததால்.

மைக்கும் வாயுமாக
ஆனால், எப்போதாவது செய்தியாளர்களைச் சந்திக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்போது பார்த்தாலும் செய்தியாளர்களுடன் புழங்கிக் கொண்டிருக்கும், சின்னக் கருத்தாக இருந்தாலும் நங்கென்று நடு மண்டையில் இறங்கும் அளவுக்கு நச்சென்று சொல்லி நடையைக் கட்டும் நாராயணசாமியை கண்டிப்பாக மேடை போட்டு மைக் பிடித்து பாட்டுப் பாடி பாராட்டியே ஆக வேண்டும்.

மோகன் நினைவாக...!
எப்படியோ திரையில் மைக்கை விட்டு விட்டுப் போய் விட்ட மோகன்தான் நினைவுக்கு வருகிறது நாராயணசாமியையும் அவர் முன் நீட்டப்படும் மைக்குகளையும் பார்க்கும்போது!.


Click it and Unblock the Notifications











