60ஆவது வயதில் மகேஷ் பாபு சகோதரர் திருமணம்.. நடிகருக்கு இது நான்காவது; நடிகைக்கு இது இரண்டாவது
ஹைராபாத்: மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் பாபு தனது 60ஆவது வயதில் நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு 4ஆவது திருமணம் ஆகும்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது சகோதரர் நரேஷ் பாபு. நரேஷ் பாபுவும் ஒரு நடிகர் ஆவார். தெலுங்கு மொழியில் பல படங்களிலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் பொருத்தம், நெஞ்சத்தை அள்ளித்தா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

நரேஷ் பாபுவின் திருமணங்கள்
நரேஷ் பாபு முதல்முதலாக மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நவீன் விஜயகிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து ரேகா சுப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேஜா என்ற மகன் இருக்கிறார். ஆனால் இவரையும் விவாகரத்து செய்தார் நரேஷ் பாபு.

50 வயதில் மூன்றாவது திருமணம்
சூழல் இப்படி இருக்க தனது 50ஆவது வயதில் மூன்றாவது திருமணம் செய்ய முடிவெடுத்து ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நரேஷ் பாபுவைவிட 20 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யாவுக்கும், நரேஷுக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் நரேஷ் பாபு இவரையும் விவாகரத்து செய்தார்.

நரேஷ் பாபு மீது ரம்யாவின் குற்றச்சாட்டு
இந்தச் சூழலில் ரம்யா ரகுபதி நரேஷ் பாபு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டில், "அவருக்கு ஏகப்பட்ட தொடர்புகள் இருந்தன. ஒவ்வொருமுறை நான் அதை கண்டுபிடித்து கேட்கும்போதெல்லாம் எனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார். அவருக்கு பல தொடர்புகள் இருந்த விவகாரம் எனது மாமியாரான விஜய் நிர்மலாவுக்கும் தெரியும். இது இப்படியே தொடர்ந்தால் சொத்தின் உரிமையிலிருந்து நீக்கிவிடுவதாகவும் எச்சரித்தார்" என குறிப்பிட்டிருந்தார்.

நரேஷ் பாபு வைத்த குற்றச்சாட்டு
ரம்யா ரகுபதியின் குற்றச்சாட்டினை மறுத்த நரேஷ் பாபு , 'ரம்யா என்னிடம் 10 கோடி ரூபாய் கேட்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதேபோல் ஒரு கும்பல் ஒன்றும் என்னை தொடர்புகொண்டு மிரட்டியது. எனது தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறேன். ரம்யாவால் எனது உயிருக்கு ஆபத்து' என பதில் குற்றச்சாட்டு வைத்தார்.

4ஆவது திருமணத்தை அறிவித்த நரேஷ்
இதனைத் தொடர்ந்து கன்னட நடிகையான பவித்ரா லோகேஷை காதலிப்பதாக நரேஷ் பாபு அறிவித்தார். மேலும் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் லிவிங் டூகெதராகவும் இருந்த வந்தனர். இதனையடுத்து இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டது. அதனை அனைவருக்கும் உறுதிப்படுத்தும்வகையில் புத்தாண்டன்று முத்தம் கொடுத்தபடி வீடியோவையும் வெளியிட்டிருந்தனர்.

60 வயதில் நரேஷுக்கு முடிந்தது 4ஆவது திருமணம்
இந்நிலையில் நரேஷ் பாபுவுக்கும், பவித்ரா லோகேஷுக்கும் திருமணம் முடிந்தது. தங்களுக்கு திருமணம் ஆன வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நரேஷ் பாபு, "எங்களின் இந்த புதிய பயணத்தில் வாழ்நாள் முழுவதும் உங்களது ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக, நடிகை பவித்ரா லோகேஷ் கடந்த 2007ஆம் ஆண்டு பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். பிரசாத்துக்கும், பவித்ராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். பவித்ராவுக்கு தற்போது 44 வயது ஆகிறது .


Click it and Unblock the Notifications











