இன்னும் நாளாகும்.. பழம்பெரும் கின்னஸ் நடிகையின் பயோபிக் இப்போ இல்லையாமே..! அவசரமாக மறுத்த மகன்!
ஐதராபாத்: பழம்பெரும் நடிகையின் பயோபிக்கை இப்போது இயக்க வாய்ப்பில்லை என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து, தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான படம், நடிகையர் திலகம்.
நாக் அஸ்வின் இயக்கிய இந்தப்படத்தில் சாவித்ரி கேரக்டரில், கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

விஜய நிர்மலா
தெலுங்கிலும் தமிழிலும் வரவேற்பை பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கை கதை சினிமாவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள விஜய நிர்மலா, தமிழில் எங்க வீட்டுப் பெண், சித்தி, பந்தயம், பணமா பாசமா? நீலகிரி எக்ஸ்பிரஸ், என் அண்ணன், ஞான ஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நரேஷ் கிருஷ்ணா
சுமார் 250 படங்களில் நடித்துள்ள விஜய நிர்மலா, 44 படங்களையும் இயக்கியுள்ளார். இத்தனை படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர், இவர்தான். இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை கதையை, இவர் மகனும் இயக்குனருமான நரேஷ் கிருஷ்ணா படமாக்க எடுக்க இருக்கிறார். இதில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசி வருவதாகக் கூறப்பட்டது.

கொடுக்கவில்லை
இந்நிலையில், இந்தப் படம் பற்றி விளக்கம் அளித்துள்ளார் நரேஷ் கிருஷ்ணா. அவர் கூறும்போது, 'எம் அம்மா விஜய நிர்மலாவின் வாழ்க்கை கதையை சினிமாவாக்கும் உரிமையை நாங்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. என் அம்மா உயிரோடு இருந்தபோது, என்னிடம் ஸ்கிரிப்ட்டை உருவாக்கச் சொன்னார். பிறகு அவர் உடல் நலம் சரியில்லாமல் போனபிறகு அதை விட்டுவிட்டேன்.

இப்போது இல்லை
அந்த ஸ்கிரிப்டை இப்போது முடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். அவர் வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. அனைத்தையும் ஸ்கிரிப்டுக்குள் கொண்டு வர விரும்புகிறேன். பிறகு என் குடும்ப உறுப்பினர்களிடம் அனுமதி பெற வேண்டும். பிறகுதான் அந்த படம் உருவாகும். இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளர்.


Click it and Unblock the Notifications











