Shruthi Shamuga priya - திருமணமாகி ஒரே வருடம்தான்.. கணவரை இழந்த சின்னத்திரை நடிகை..
சென்னை: Aravind Shekar (அரவிந்த் சேகர்) சின்னத்திரை தொடர்களில் பிரபலமானவராக இருக்கும் ஸ்ருதி சண்முகப்ரியாவின் கணவர் அரவிந்த் சேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஃபேமஸான ஒன்றாக இருந்தது நாதஸ்வரம் சீரியல். திருமுருகன் இயக்கிய அந்த சீரியலில் நடித்து புகழ் அடைந்தவர் ஸ்ருதி சண்முகப்ரியா. அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களிலும் நடிதார். பிஸியாக நடித்து அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக மாறியிருக்கிறார் ஸ்ருதி.

திருமணம்: இவர் அரவிந்த் சேகர் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார். அடிப்படையி பாடி பில்டரான அரவிந்த் சேகர் கடந்த ஆண்டு நடந்த மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை வென்றவர். மேலும் ஜிம் ஒன்றை சொந்தமாக வைத்து பலருக்கு ஃபிட்னெஸ் ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் சேகர் மரணம்: திருமணத்துக்கு பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஸ்ருதி ஷண்முகப்ரியா அரவிந்த் சேகருடன் இணைந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்தார். இரண்டு பேரும் போடும் வீடியோக்களும், போஸ்ட்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியும் வந்தன. இந்தச் சூழலில் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
என்ன நடந்தது?: அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு அரவிந்த் சேகர் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது உயிரும் பிரிந்திருக்கிறது. அரவிந்த் சேகருக்கு 30 வயதுதான் ஆகிறது. திருமணமாகி ஒரே வருடத்தில் இப்படி நடந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கணவரை இழந்து வாடும் ஸ்ருதிக்கு சின்னத்திரையினரும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

இன்ஸ்டா பதிவு: இதுகுறித்து நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உன்னுடைய உடல் மட்டும்தான் என்னைவிட்டு பிரிந்திருக்கிறது. உனது உயிர், மனம், என்னை அரவணைக்கும் பாதுகாப்பு எல்லாம் என்னைத்தான் சுற்றியிருக்கிறது. நாளுக்கு நாள் உன் மீது எனக்கு அன்பு அதிகரித்திருக்கிறது. நாம் இருவரும் சிறந்த தருணங்களை ஏற்கனவே உருவாக்கிவிட்டோம். அதை எப்போது வைத்திருப்பேன். என் அருகில் உனது இருப்பை உணர்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு நன்றி: மேலும் அரவிந்த் தன்னுடன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்து, "இந்த ஒரு இரவு மீண்டும் கிடைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன் என உருக்கமாக கூறியிருக்கும் ஸ்ருதி, 'உங்களின் அன்பும் என் வீட்டில் இருப்பவர்களின் அரவணைப்பும் எனது குடும்பத்தினருக்கு நிறையவே தைரியத்தை கொடுத்திருக்கிறது. எங்களுக்காக வேண்டிக்கொண்டதற்கு நன்றி' என ரசிகர்களுக்காகவும் ஒரு போஸ்ட்டை பதிவு செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











