ஏ.வி.எம் செக்யூரிடி டூ தேசிய விருது இயக்குநர்- ஆரம்பகால சினிமா வாழ்க்கை கஷ்டங்களை பேசிய பாண்டிராஜ்!
சென்னை: 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாரிக்குவித்தது. தான் இயக்கிய படங்கள் மூலம் பெரும்பாலும் ஏதாவது ஒரு சமூக கருத்தை வெளிப்படுத்துபவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தனது தொடக்க காலத்தில் சென்னையில் தான் என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டார் என்பதை பகிர்ந்து கொண்டார்.
அதில், “ சென்னைக்கு நான் முதன் முதலில் வரும்போது எனது அப்பா ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்க மாட்டேன் என கூறிவிட்டார். ஆனால் எனது அம்மா 300 ரூபாய் கொடுத்தார். நான் 350 ரூபாய் தயார் செய்து மொத்தம் 650 ரூபாயுடன் சென்னைக்கு வந்தேன். சென்னையில் எனக்கு வெள்ளைச்சாமி என்ற நண்பனை மட்டும்தான் தெரியும். அவனும் போரூரில் தங்கியிருந்தான். நண்பன் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தான். அவனது அறையில் கொஞ்ச காலம் இருந்தேன். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது.

விஜயகாந்த்க்கு கதை சொல்ல சென்றேன்
எனக்கு விஜயகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். அவரைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் அவர் மீதான மதிப்பை கூட்டியது. அவரைச் சந்தித்து சினிமா வாய்ப்பு கேட்கலாம் என்ற எண்ணத்தில் அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கு அவர் இல்லை அங்கிருந்து அவரது வீட்டிற்குச் சென்றேன், அவரை அங்கு பார்க்கவே முடியவில்லை. அவரது வீட்டு வாட்ச் மேன் என்னை விசாரித்தார். நான் விஜயகாந்த் சாரிடம் கதை சொல்ல வந்திருக்கின்றேன் என்றதும், யாரிடம் உதவியாளராக பணியாற்றினாய் எனக் கேட்டார். நான் யாரிடமும் பணியாற்றவில்லை என்றதும், ஓ, நேரடியாவே டைரக்டரா என ஒருமாதிரி இழுவையாக கேட்டார்.
ஏ.வி.எம் செக்யூரிட்டி
தொடர்ந்து அவரே, முதலில் யாரிடமாவது உதவியாளராக வேலை செய்துவிட்டு, சினிமாவைக் கற்றுவிட்டு அதன் பின்னர் வந்து கதை சொல் என்றார். எனக்கு யாரையும் தெரியாது என்றதும், இப்போ ஏ.வி.எம்-இல் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. அங்க போ, அங்க சினிமா தொடர்பான ஆட்கள் அதிகமானோர் வருவார்கள் அவர்கள் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து விடலாம் எனக் கூறினார். நானும் அதுபோல கூறியதால் என்னை ஏ.வி.எம்-இல் செயூரிட்டி வேலைக்கு சேர்த்துக் கொண்டனர். நான் வேண்டுமென்றே ஏ.வி.எம் உருண்டைக்கு கீழ் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்து கொண்டேன். நான் செக்யூரிட்டி வேலையையும் மிகவும் நேசித்துதான் செய்தேன்.
பாக்யராஜிடம் ஆஃபீஸ் பாய்
எனது உதவியாளர்களிடம் கூட, “ஒருபடத்தில் நீ வேலை செய்கின்றாய் என்று செய்யாதே. அது உன்னுடைய படம் என்ற உணர்வோடு வேலை செய்” என்பேன். ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இருந்து, இயக்குநர் பாக்யராஜ் நடத்திய பாக்யா பத்திரிகையில் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். பாக்யராஜ் சாரை என்னால் இம்ரஸ் செய்ய முடியவில்லை. அதன் பின்னர் சேரன் சாரின் பாரதி கண்ணம்மா படத்தினைப் பார்த்து வியந்து போனேன். அதன் பின்னர் சேரன் சாரிடம் உதவியளாராக சேர்ந்தேன் இப்படித்தான் எனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கை இருந்தது” எனக் கூறியுள்ளார். இயக்குநர் பாண்டி ராஜின் இந்த பேட்டி ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











