தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் திடீர் மறைவு... அடுத்தடுத்து சோகம்... அதிர்ச்சியில் திரையுலகம்
திருச்சூர்: மலையாள திரையுலகில் முக்கியமான இயக்குநராக வலம் வந்தவர் கேபி சஷி.
திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ள கேபி சஷி கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் கேபி சசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், அவருக்கு வயது 64.
தேசிய விருது வென்ற இயக்குநர் கேபி சஷியின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூனிஸ்ட் டூ இயக்குநர்
எளிய மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமான திரைப்படமாக எடுப்பதில் மலையாள திரையுலகம் முக்கியமான இடத்தில் உள்ளது. அதேபோல், மலையாள இயக்குநர்களுக்கும் ரசிகர்களிடம் சிறப்பான அங்கீகாரம் காணப்படுகிறது. இவர்களில் முக்கியமானவர் இயக்குநர் கே.பி. சஷி. இவர் எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் சிந்தனையாளருமான கே. தாமோதரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 1970ல் ஜேஎன்யுவில் படிக்கும் போது கார்ட்டூனிஸ்டாகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

தேசிய விருதும் கேபி சஷியும்
இந்நிலையில், ஏராளமான ஆவணப் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த கே.பி.சஷியின் இயக்கத்தில், கடந்த 1994ம் ஆண்டு 'இலையும் முள்ளும்' என்ற படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் பிரபலமானது மட்டுமின்றி, இப்படத்திற்காக தேசிய விருதையும் வென்று அசத்தியுள்ளார். அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு 'ஏக் அலக் மௌசம்' படத்தை இயக்கி இந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார். இதில் நந்திதா தாஸ், அனுபம் கேர், ரேணுகா ஷஹானே ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். பிரபல மலையாள நடிகர் கோபியும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

திடீர் மறைவு
இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கேபி சஷி. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சஷி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 64. கேபி சஷியின் மலையாள திரையுலகினர் மட்டுமின்றி, சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலையும் முள்ளும் திரைப்படம் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சமூக ரீதியான உளவியல் வன்முறைகள் பற்றியும் ஆழமாக பேசியிருந்தது.

திரையுலகினர் அஞ்சலி
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்த படைப்பாளர் என்ற அங்கீகாரம் கேபி சஷிக்கு உள்ளது. இலையும் முள்ளும் உட்பட பல்வேறு சிறப்பான திரைப்படங்களை இயக்கிய கே.பி.சஷியின் மறைவுக்கு, மலையாள திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது படைப்புகள் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் எனவும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











