ஓனர் நாங்கதான்..ஏவிஎம் யாருங்க?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி.. நேஷனல் பிக்சர்ஸ் போட்ட முட்டுக்கட்டை
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இது சிவாவுக்கு 25ஆவது படமாகும். அதேபோல் விஜய் ஆண்டனி நடிக்கும் அவரது 25ஆவது படத்துக்கும் தெலுங்கில் பராஷக்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு பேரில் யாருக்கு அந்த தலைப்பு செல்லும் என்ற குழப்பம் எழுந்தது. ஏவிஎம் நிறுவனமோ சிவகார்த்திகேயனுக்கு இந்தத் தலைப்பை வழங்கியிருப்பதாக அறிவித்திருந்தது.
சிவகார்த்திகேயன் அமரன் படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 1965ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், அந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவரின் வாழ்க்கையையும் அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாகும்.

சிவகார்த்திகேயன் Vs விஜய் ஆண்டனி: சூழல் இப்படி இருக்க இந்தப் படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜய் ஆண்டனி நடிக்கும் அவரது 25ஆவது படத்துக்கும் தமிழில் சக்தித் திருமகன் என்றும், தெலுங்கில் பராஷக்தி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூழல் இப்படி இருக்க இந்தப் பெயரை தான் முன்னரே பதிவு செய்துவிட்டதாக விஜய் ஆண்டனி சமீபத்தில் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் குழப்பம் எழுந்தது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் நேரில் சந்தித்தனர். பிறகு சமரசம் செய்துகொண்டதாக தெரிவித்தார்கள்.
நேஷனல் பிக்சர்ஸ்: இதற்கிடையே பராசக்தி என்ற பெயரை சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு கொடுத்துவிட்டதாக ஏவிஎம் நிறுவனம் அறிவித்தது. ஆனால் கலைஞர் கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி அறிமுகமான 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் பெருமாள் முதலியார்தான் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களில் விநியோக உரிமையைத்தான் வாங்கியது.
சிவாஜிக்கு ஆட்சேபனை: அந்தப் படத்தில் சிவாஜியை ஹீரோவாக நடிக்க வைக்க ஏவி மெய்யப்ப செட்டியார் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் பெருமாள்தான் பிடிவாதமாக சிவாஜியை ஹீரோவாக்க வேண்டும் என்று சொல்லி நடிக்க வைத்தார். ஹன்னுடைய இறுதிக்காலம்வரை சிவாஜி; ஒவ்வொரு பொங்கல் அன்றும் வேலூர் வந்து பெருமாளிடம் ஆசி பெற்று செல்வார். அப்படி எங்கள் தாத்தாவின் பெருமைமிகு தயாரிப்புதான் பராசக்தி. பொன்விழா, வைர விழா கண்டிருக்கும் இப்படம் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்கிற அளவுக்கு அப்படத்தில் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களும்,சிவாஜியின் நடிப்பும் மக்கள் மனதில் எப்போதும் நிலைத்து நிற்கும்.
வேறு யாரும் பயன்படுத்தாதீங்க: விரைவில் வெள்ளிவிழா காண இருக்கும் வேளையில் பராசக்தி படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான பணிகளையும் தொடங்கவிருக்கிறோம் என்கிற செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவித்துக்கொள்கிறோம். இந்தத் தருணத்தில் எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்பட தலைப்பாக பயன்படுத்துவதை தவிர்த்தட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











