இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு முட்டாள்.. அவர் சுயநலவாதி.. சரமாரியாக விளாசிய 'நண்பர்' நட்டி!
சென்னை: பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம், இந்தி இயக்குனர் அனுராஜ் காஷ்யபை சரமாரியாக விளாசியுள்ளார்.
இந்தி சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்தவர் நட்ராஜ் சுப்ரமணியம். பல மெகா பட்ஜெட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அனுராக் காஷ்யப் இயக்கிய பாஞ்ச், பிளாக் பிரைடே, பிரதீப் சர்கார் இயக்கிய பரினீதா, ராஜ்குமார் சந்தோஷியின் ஹல்லோ போல், ரோகித் ஷெட்டியின் கோல்மால் ரிட்டர்ன்ஸ் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சதுரங்க வேட்டை
தமிழில் விஜய்யின் யூத், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா, துப்பாக்கி, புலி ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள அவர், உதயபானு மகேஸ்வரன் இயக்கிய 'நாளை' படம் மூலம் நடிகரானார். பின்னர் ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படம் மூலம் கவனிக்கப்பட்டார்.

அனுராக் காஷ்யப்
தொடர்ந்து, எங்கிட்ட மோதாதே, போங்கு, காட்பாதர், வால்டர் படங்களில் நடித்துள்ளார்.
இவரும் இந்தி சினிமா இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யமும் நண்பர்கள். ஆரம்பத்தில் ஒன்றாக பல படங்களில் பணியாற்றியவர்கள். இந்நிலையில் திடீரென தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவரை விளாசியுள்ளார், நட்டி.

பிளாக் பிரைடே
அதில் அவர் கூறியிருப்பதாவது: ராம்கோபால் வர்மா இயக்கிய சத்யா படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர்களில் ஒருவராக வந்தவர் அனுராக். பிறகு பாஞ்ச் படத்தின் ஸ்கிரிப்ட்டோடு எங்களிடம் வந்தார். நான் அவருக்கு பணம் வாங்காமல் அந்த படத்தில் பணியாற்றினேன். அவரது லாஸ்ட் டிரைன் டு மகாகாளி, பிளாக் பிரைடே படங்களுக்கும் சம்பளம் தரவில்லை.

முட்டாள்தனமாக
அனைத்தையும் அவருக்காகச் செய்தேன். அவர் தனது நண்பர்களை, தன் வட்டத்தில் இருந்து விலகியே வைத்திருப்பார். இப்போது என்னை மறந்துவிட்டு முட்டாள்தனமாகப் பேசிவருகிறார். அவருடன் இருக்கும் மற்றவர்களை கேளுங்கள். அவர் ஒன்றுமே இல்லை. முட்டாள் அனுராக் காஷ்யப். முட்டாள்கள் முட்டாளாகவே இருக்கிறார்கள்.

உண்மை சொல்கிறேன்
நான் ஒரு சுயநலவாதியை பற்றிப் பேசுகிறேன். அது இயக்குனர் அனுராக் காஷ்யப்தான். நான் உண்மையை சொல்கிறேன். யாரும் கேட்பதற்கு ரெடியாக இல்லை. நான் என் மனதின் அடியாழத்தில் இருந்து உண்மையை சொல்கிறேன், நான் என்ன செய்ய?' -இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

செல்லமானத் திட்டு
இந்த ட்வீட் பற்றி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நட்ராஜிடம் கேட்டபோது, 'இது சும்மா செல்லமானத் திட்டு. அனுராக் காஷ்யப் என் இனிய நண்பன். பல வருட நண்பன். அதனால் செல்லமாக சில விஷயங்களை சொன்னேன். இதில் கடுமையாக நினைக்க எதுவும் இல்லை' என்று சொன்னார். நட்டியின் இந்த ட்வீட் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











