நவரச நாயகன் கார்த்திக்கின் சூப்பர் டான்ஸ்.. கம்புலாம் சுத்துறாரு.. உடம்பு சரியில்லைனு யாருங்க சொன்னது?
சென்னை: நவரச நாயகன் என்று புகழப்படும் நடிகர் கார்த்திக்தான் கடந்த மாதத்தில் சோஷியல் மீடியாவில் சென்சேஷனலாக இருந்தார். இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் கொடுத்த ஒரு பேட்டியால் வந்த நிலைமை அது. இது ஒருபக்கம் இருக்க கார்த்திக்கிற்கு உடல்நிலை சரியில்லை என்றெல்லாம் தகவல்கள் பரவின. இந்நிலையில் மொட்டை மாடியில் அவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்று பரவியிருக்கிறது.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பாரதிராஜாவின் கண்களில் பட அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவருடனேயே நடிகை ராதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். பாரதிராஜாவின் இயக்கம் என்பதால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி கார்த்திக்கின் அழகும், திறமையும் ஒட்டுமொத்த திரைத்துறையையும் அவர் பக்கம் திருப்பியது. இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே சரசரவென்று வளர்ந்தார்.
சூப்பர் நடிகர்: அவரது வளர்ச்சிக்கு கார்த்திக்கின் திறமைதான் முழு காரணம். எந்த சீனாக இருந்தாலும் சிங்கிள் டேக்கில் நடித்து அசத்தினார். அவரது துறுதுறு நடிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் பெருக தொடங்கியது. ரசிகர்கள் மட்டுமில்லை ரசிகைகளும்தான். இன்றுவரை கார்த்திக்கின் நடிப்பை ஈடு செய்வதற்கு அவரை விட்டால் வேறு யாருமே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனை திரைத்துறையில் பலரும் ஒத்துக்கொள்வார்கள்.

வீழ்ச்சியும் அவரால்தான்: எப்படி அவர் வளர்ந்ததற்கு அவரே காரணமோ அதேபோல் அவர் வீழ்ந்ததற்கும் அவர்தான் காரணம். திறமை அதிகம் இருந்தால் மட்டும் போதாது ஒழுக்கம், நேரம் தவறாமை, கொடுத்த வாக்கை முடிந்த அளவுக்காவது நிறைவேற்றுவது போன்ற குணங்கள் இருந்தால்தான் திறமையாளர் ஒருவர் வெற்றியாளராக நீடிக்க முடியும் என்பதற்கு நவரச நாயகன்தான் வாழும் உதாரணம் என்று அவருடன் பணியாற்றியவர்களே சொல்வார்கள். ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது, கால்ஷீட் விவகாரத்தில் குளறுபடி செய்வது என ஏகப்பட்ட சேட்டைகளை அவர் செய்வதாக பலமான பேச்சுக்கள் உண்டு.
பாரதி கண்ணன் பேட்டி: அதனை சில மாதங்களுக்கு முன்பு டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணனும் உறுதி செய்தார். கார்த்திக் பற்றி அவர் பேசியது வரவேற்பை பெற்றாலும் கார்த்திக் மாதிரியே பேசி காட்டியதுதான் ஹைலைட். அந்த பேட்டி பற்றிக்கொண்டு வைரலாக எங்கும் கார்த்திக் மயம்தான். அவர் பேட்டி கொடுத்த பிறகு பலரும் கார்த்திக் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி ஓய்வில் இருக்கும்போதுகூட சென்சேஷனல் ஆனார் கார்த்திக்.
புதிய வீடியோ: அதேசமயம் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றெல்லாம் சொல்லி வதந்திகள் பரவின. அதனை அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் ஒரு பேட்டியில் மறுத்திருந்தார். ஆனாலும் அந்த வதந்திகள் நின்றபாடில்லை. இந்நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கார்த்திக் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர், நடிகர், மூத்த பத்திரிகையாளர் என பன்முகங்களை கொண்ட சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருக்கும் வீடியோவில், கார்த்திக் நடனமாடி கொண்டே கம்பு சுற்றவும் செய்கிறார். இந்த வீடியோவும் இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











