கொரோனாவுக்கு வீட்டில் சிகிச்சை பெற்ற நடிகை.. உடல் நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு மாற்றம்!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைக்கு உடல் நிலை திடீரென மோசமானதால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருந்தும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்
இந்த வைரஸ் தொற்று மகாராஷ்ட்ராவில் வேகமாக பரவி வருகிறது. பிரபலங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

இயக்குனர் ராஜமவுலி
நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி, தேஜா, நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நிக்கி கல்ராணி உள்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கொரோனா பரிசோதனை
இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் நவ்னீத் கவுர். கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத்தின் மாமனாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் சோதனை
அப்போது நவ்னீத் ராணாவின் மகன், மகள், சகோதரி, மாமியார் உள்பட குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் நவ்னீத் ராணாவுக்கு தொற்று கண்டறியப்படவில்லை. மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனார் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

லீலாவதி மருத்துவமனை
அவர் உடல் நலம் சரியாகாததால், கடந்த 6 ஆம் தேதி நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணாஸ் ஜோடி
இவர், நவ்னீத் கவுர் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கோபிசந்தின் ரணம், ஜூனியர் என்.டி.ஆரின் எமதொங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











