Nawazuddin Siddiqui: தி கேரளா ஸ்டோரி சர்ச்சை... வதந்திகள் வேண்டாம்... ரஜினி பட நடிகர் காட்டம்
சென்னை: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி மே 5ம் தேதி வெளியானது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
மத வெறுப்பை தூண்டும் இந்தப் படத்திற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி சர்ச்சையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் டிவிட் செய்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி சர்ச்சையில் நவாசுதீன் சித்திக்
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்த மாதம் 5ம் தேதி வெளியானது. மதவெறுப்பு பிரசாரத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை தடை செய்யுமாறு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. அதேநேரம், தமிழ்நாட்டில் இந்தப் படம் இரண்டு நாட்கள் மட்டுமே திரையிடப்பட்டன.
அதன்பின்னர் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லையென தி கேரளா ஸ்டோரி படத்தை திரையரங்க நிர்வாகங்கள் திரையிட மறுத்துவிட்டன. அதேபோல், கேரள உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரையும் தி கேரளா ஸ்டோரி சர்ச்சை விஸ்வரூபமெடுத்தது. கேரளாவில் லவ் ஜிகாத் என்ற போர்வையில் 32000 இந்து பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என இயக்குநர் சுதிப்தோ சென் இந்தப் படத்தில் சித்தரித்துள்ளார்.
மேலும், அவர்கள் முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு ISIS இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் அவர்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொய் பிரச்சாரங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தான், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடைக் கேட்டு பல்வேறு அமைப்புகள் நீதிமன்றம் வரை சென்றன.

அப்போது தி கேரளா ஸ்டோரி படத்தின் கதையும் காட்சிகளும் கற்பனை தான் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநில அரசுகள் இந்தப் படத்தை தடை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இதுவரை 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதனிடையே பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து ஜோகிரா சாரா ரா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியிலும் நவாசுதீன் சித்திக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து டென்ஷனான நவாசுதீன் சித்திக், தி கேரளா ஸ்டோரி சர்ச்சை குறித்து காட்டமாக டிவிட் செய்துள்ளார். அதில், "தயவுசெய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். டிஆர்பி-க்காக வதந்திகளை செய்தியாக்குவதை நிறுத்த வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை. படங்களை தடை செய்ய கோரிக்கை விடுப்பதையும் நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் ஒரு படம் சமூக நல்லிணக்கத்தையும், மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் என்றால் அது மிக தவறானது எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக, பாலிவுட் இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், ஒரு திரைப்படத்தை நீங்கள் ஏற்கின்றீர்களோ இல்லையோ, அது நேர்மையான பிரசாரம் என்றாலும் தவறானதாக இருந்தாலும் தடை செய்ய சொல்வது தவறானது என டிவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











