கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்ட பிரபல ஜோடி.. மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக தகவல்!
சென்னை: கொரோனாவால் பிரபல ஜோடி தங்களின் விவாகரத்து முடிவை கைவிட்டுள்ளது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் நவாசுதீன்.
வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மனைவி குற்றச்சாட்டு
இவரது மனைவி ஆலியா சித்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். கையோடு டிவிட்டரில் இணைந்த அவர், கணவர் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

அதிர்ச்சி உண்மைகள்
பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை சொல்லப் போவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். ஏற்கனவே திருமணமான நவாசுதீன் சித்திக் கடந்த 2009ஆம் ஆண்டு ஆலியாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் முடித்த நாளில் இருந்தே இருவருக்கும் பிரச்சனைதான் என்று கதறினார் ஆலியா.

கொடுமைப்படுத்தினர்..
மேலும் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுடன் தான் தனியாக வசித்து வருவதாக கூறிய அவர், நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொல்ல முடியாத அளவுக்கு தன்னை கொடுமை படுத்தியதாக கூறினார். ஆலியாவின் இந்த குற்றச்சாட்டுக்களும் விவாகரத்து முடிவும் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று
இந்நிலையில் ஆலியா தற்போது விவாகரத்து முடிவை கைவிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள ஆலியா, சில வாரங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறியுள்ளார். அப்போது, நவாசுதீன் தான் குழந்தைகளை பார்த்துக்கொண்டார் என்றும் தன்னையும் நன்றாக கவனித்துக்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

சேர்ந்து வாழ முடிவு
மேலும் அவர் நல்ல தந்தையாகவும், கணவராகவும் இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் அன்பாக இருக்கிறார். அப்போது அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். கொரோனாவால் ஆலியா விவாகரத்து முடிவை கைவிட்டிருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











