Nayanthara - எல்லோரும் திட்டுவார்கள்.. ப்ளீஸ் அப்படி மட்டும் கூப்பிடாதீங்க.. நயன்தாரா வைத்த வேண்டுகோள்
சென்னை: Nayanthara (நயன்தாரா) நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளால் முன்னணி நடிகை என்ற இடத்துக்கு நகர்ந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல் தோல்விகளால் கடுமையான விமர்சனத்தை சந்தித்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய இரண்டாவது காதலுக்காக மதம் மாறியதோடு மட்டுமில்லாமல் சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார்.

ரீ என்ட்ரி: ஆனால் அந்தக் காதல் தோல்வியடைந்ததால் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்தவகையில் அவர் நடித்த நானும் ரௌடிதான், அறம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. மேலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள்.
திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுக்கு உயிர், உலக் என்றும் பெயர் வைத்திருக்கிறார். குழந்தை பெற்ற பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்குவார் என்றுதான் பலரும் பேசினார்கள்.
பாலிவுட் என்ட்ரி: ஆனால் நயன்தாரா அப்படி இல்லை. தற்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஜவான் படம் ஹிட்டானதை அடுத்து அவருக்கு மேலும் சில ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழில் அவர் நடித்த இறைவன் படம் படுதோல்வியடைந்தது. அடுத்து அன்னபூரணி என்ற படத்தில் நடித்தார். இதனை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
கலவையான விமர்சனம்: இது நயன்தாராவுக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. அதேபோல் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் படத்துக்கு கூட்டமும் வரவில்லை. இதனால் வசூல் ரீதியாகவும் அந்தப் படம் அடி வாங்கியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் சொல்கின்றன.
நயன் பேட்டி: இந்நிலையில் அன்னபூரணி படத்தையொட்டி நயன்தாரா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் சம்பாதித்திருக்கும் பணம், புகழ் என அனைத்துமே ரசிகர்கள் கொடுத்தது தான். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தயவு செய்து என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். எல்லோரும் திட்டுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











