அஜித்தை வைத்து எடுக்க வேண்டிய படம் அப்படி இருந்திருக்கும்.. சீக்ரெட் சொன்ன விக்னேஷ் சிவன்
சென்னை: போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார். அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. சூழல் இப்படி இருக்க அஜித்தை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அப்படம் ட்ராப்பானது. இப்போது அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கிவருகிறார்.
சிம்புவை வைத்து தனது முதல் படமான போடா போடி படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். அதுதான் வரலட்சுமிக்கும் முதல் படம். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் அதில் விக்னேஷ் சிவனின் மேக்கிங்கை பார்த்த பலரும் இந்த சின்ன வயதில் இப்படி ஒரு பக்குவமான மேக்கிங்கை செய்திருக்கிறார் என்று அவரை பாராட்டினார்கள். இருந்தாலும் அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே பாடல்கள் எழுதுவது, போஸ்டர் டிசைன் என கிடைக்கும் வேலைகளை செய்தார்.

நானும் ரௌடிதான்: இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தனுஷின் தயாரிப்பில் நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படம் டார்க் காமெடி ஜானரில் உருவாகி சக்கைப்போடு போட்டது. இன்றுவரை அந்தப் படம் பலராலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவனும் கோலிவுட்டில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை.
நயனுடன் திருமணம்: நானும் ரௌடிதான் படத்தை எடுத்தபோதுதான் நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் சில காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் படம் எதுவும் இயக்காமல் இருந்த சூழலில் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
அஜித்துடன் படம்: அந்தவகையில் லைகா தயாரிப்பில் அஜித்தை வைத்து படம் இயக்கவிருந்தார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் பட்ட அடியை அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் சரிக்கட்டிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்தார் விக்கி. ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து அப்படத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
எப்படி இருந்திருக்கும்?: இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கவிருந்த படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், "நான் அஜித்திடம் சொன்ன கதை ஆவேஷம் போன்ற கதை ஆகும். அந்தப் படம் மட்டும் ஓகே ஆகியிருந்தால் கண்டிப்பாக அஜித்தை பலரும் வித்தியாசமாக பார்த்திருப்பார்கள்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னது ஆவேஷம் போன்ற கதையா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கும் என்று கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.
இப்போதைய படம்: விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் பிரதீப்புடன் கீர்த்தி ஷெட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. படத்தின் பணிகள் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











