நயன்தாராவின் 'O2' டீசர் வெளியீடு - ஆக்சிஜனுக்காக ஒரு தாயின் பாசப் போராட்டம்
சென்னை: ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிப்பில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும், 'O2' திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.
ஆக்சிஜன் சிலிண்டரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஒரு தாயின் பாசப்போராட்டத்தை பிரதிபலிப்பது போன்று அமைந்திருக்கிறது.
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஸ் ஜி எஸ் வித்தியாசமான கதையோட்டத்தில் இயக்கியிருக்கிறார்.

கதை என்ன?
தனது 8 வயது மகனோடு நயன்தாரா செல்லும் பேருந்து விபத்து ஒன்றில் சிக்குகிறது. அப்போது அவ்விபத்தின் காரணமாக அங்கு ஆக்சிஜன் தேவை ஏற்படுகின்றது. நுரையீரல் பாதிப்பு கொண்ட தனது மகனுக்காக நயன்தாரா வைத்திருக்கும் சிறிய ஆக்சிஜன் சிலிண்டரை ஒரு சிலர் அபகரிக்க நினைக்கின்றனர். அவர்களிடமிருந்து நயன்தாரா எப்படி தப்பிக்கிறார்? மகனை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே கதையாக இருக்கும் என ஆருடங்கள் கூறுகின்றன. அதற்கேற்றபடி தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டீசரும் கதையின் போக்கை ஓரளவு புரிந்து கொள்ள வைக்கிறது. இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் யுடியூப் புகழ் ரித்விக் நடித்திருக்கிறார்.

தொழில்நுட்பக் குழு
இப்படத்திற்கு தமிழ் எ அழகன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் பேருந்தில் எடுத்திருப்பது போல் டீசரில் தெரிகிறது. என்றாலும், பார்ப்பதற்கு மிரட்டலாகக் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

நேரடி ஓடிடி ரிலீஸ்
முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்போடு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது தியேட்டர் ரிலீசைக் கைவிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியீடு காண்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நயன், ட்ரீம் வாரியர் கூட்டணி
வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து படமாக்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார் நயன்தாரா. இதற்கு முன் காஷ்மோரா திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











