விதிமீறி போட்டோஷுட்.. நயன்தாரா -விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 9ம் தேதி மகாபலிபுரம் ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.
Recommended Video
இதையடுத்து நேற்றைய தினம் இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து, பின்பு போட்டோஷுட்டும் நடத்தினர்.
விதிமீறி அவர்கள் போட்டோஷுட் எடுத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் காலணி அணிந்தும் இந்த போட்டோஷுட் எடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய முறைப்படி திருமணம்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திரைப்பிரபலங்கள் வாழ்த்து
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி மற்றும் இயக்குநர்கள் அட்லி, கௌதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். மிகவும் சிறப்பாக ஆனால் மிகுந்த பாதுகாப்புடன் இந்த திருமணம் நடைபெற்றது. காவலர்கள் மட்டுமின்றி 80க்கும் மேற்பட்ட பவுன்சர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

திருப்பதியில் திருமணம் நடத்த திட்டம்
முன்னதாக திருப்பதியில்தான் இந்தத் திருமணத்தை நடத்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி திட்டமிட்டிருந்தது. இதற்கென முன்னதாக திருப்பதிக்கும் சென்றது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்துதான் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

குளிகை காலத்தில் திருமணம்
இந்த திருமணம் குளிகை காலத்தில் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. ஆயினும் மணமக்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்று முன்னதாக புரோகிதர்கள் தெரிவித்திருந்தனர். முன்னதாக பல கோயில்களில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா பல பரிகாரப் பூஜைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம்
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நேற்றைய தினம் கல்யாண உற்சவ சேவையில் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நயன்தாரா அழகான மஞ்சள் நிறப் புடவையிலும் விக்னேஷ் சிவன் வேட்டி சட்டையிலும் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன.

திருப்பதியில் போட்டோஷுட்
இதனிடையே கோயில் வளாகத்தில் இவர்கள் இருவரும் பொதுவெளியில் போட்டோஷுட் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நயன்தாரா காலில் காலணியுடன் இந்த போட்டோஷுட்டில் காணப்பட்டார். அந்தப் பகுதியில் காலணி அணிய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

விசாரணை நடத்த தேவஸ்தானம் முடிவு
இதுகுறித்து தேவஸ்தானத்திடம் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் திருப்பதி மலையில் உள்ள நடைமுறைகளை மீறி செயல்பட்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிடம் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கவும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

உரிய நடவடிக்கை
மேலும் இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி, ஏழுமலையான் கோயில் முன்பு உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோயில் திருக்குளம் ஆகிய பகுதிகளில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

அனுமதி இல்லாமல் போட்டோஷுட்
மேலும் பெரிய அளவில் போட்டோஷுட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களும் அவர்களுக்கு உரிய அறிவுரை கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த தவறியுள்ளதாக தெரிவித்த பால்ரெட்டி, அவர்கள்மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சர்ச்சையில் சிக்கிய புதுமண தம்பதி
திருமணம் முடிந்த மறுநாளே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். முன்னதாக திருமணத்திற்கு அழைக்கப்படாத விக்னேஷ் சிவனின் பெரியப்பா, இவர்களது திருமணம் குளிகையில் நடைபெற்றுள்ளதாக சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











