படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட லைட்மேன் பலி!
சென்னை: அகரம் காலனி படத்தின் படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் லைட் மேன் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். இதனால், படப்பிடிப்புதளம் பரபரப்புடன் காணப்படுகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து அறம் என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆனார் கோபி நயினார். 2015ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து அந்த ஆண்டு அதிக வசூலை அள்ளிய திரைப்படமாக இருந்தது. சமூகத்தின் சாபக்கேடுகளில் ஒன்றான ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பது குறித்த அவலங்களை இப்படம் தோலுரித்து காட்டியது.

இந்த படத்தின் கதையை உணர்ந்து வசன உச்சரிப்புகளிலும், நடிப்பிலும் தனி முத்திரையை பதித்திருந்தார் நயன்தாரா. நயன்தாராவின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் மறக்க முடியாத திரைப்படமாகவே உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையில, அறம் பட இயக்குநர் கோபி நயினார் தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பில் விபத்து: இப்படத்தின் படப்பிடிப்பு செங்குன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது லைட்மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் அகரம் காலனி படத்தின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்த போது காடா லைட் உபகரணத்தை லைட்மேன் சண்முகம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தள்ளி செல்லும் போது, காடா லைட் தடுமாறி அந்த தெருவில் இருந்த உயரழுத்த மின் கம்பியில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், லைட் மேன் சண்முகம் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி லைட்மேன் பலி: இந்த விபத்து குறித்து செங்குன்றம் காவல்துறையினர், சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சண்முகத்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், காலில் காயமடைந்த ரஞ்சித்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த, சண்முகத்தின் குடும்பத்திற்கு தகவல் வெளிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லைட் மேன் சண்முகத்தின் குடும்ப விவரம் எதுவும் தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் லைட் மேன் உயிரிழந்தது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











