வைர மூக்குத்தி பரிசு.. மூக்குத்தி அம்மன் 2 பட பூஜைக்கே பிரம்மாண்ட செட்.. கடவுளே நயன்தாரா!
சென்னை: அல்டிமேட் ஸ்டார் வேண்டாம் என அஜித் சொன்னதும் தல என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். சினிமா உலகமே தல என அழைத்து வந்த நிலையில், அந்த பட்டம் வேண்டாம் என்றார். சமீபத்தில் கடவுளே அஜித்தே என ரசிகர்கள் கோஷம் போட அதற்கும் எண்ட் கார்டு போட்டு விட்டார்.
அமெரிக்காவுக்கு ஏஐ படிக்க சென்ற கமல்ஹாசன் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் வரை உலக நாயகன் டைட்டில் கார்டை பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென தன்னை யாரும் உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார்.

முதல் படமான ஜெயம் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதர் படம் வரை ஜெயம் ரவி என போட்டு வந்த ரவி மோகன் காதலிக்க நேரமில்லை படத்தில் இருந்து ரவி மோகன் என மாறிவிட்டார். பிரபலங்கள் அடைமொழிகளை வெறுக்க ஆரம்பித்து வரும் நிலையில், அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த நயன்தாரா இன்று நடைபெற்ற மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் பங்கேற்றுள்ளார்.
பிரம்மாண்ட கோயில் செட்: ஐசரி கணேஷ் தயாரிப்பில் கடைசியாக வெளியான பல படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை மலைபோல நம்பிக் கொண்டிருக்கிறார். அரண்மனை 4 படத்தின் மூலம் சுந்தர் சி 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக் கொடுத்த நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிக்க ஐசரி கணேஷ் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் மூக்குத்தி அம்மன் 2 பட பூஜைக்கே பிரம்மாண்டமான கோயில் செட்டை போட்டுள்ளார். வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஹெலிகாப்டரை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார் ஐசரி கணேஷ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

மீனா முதல் ரெஜினா கசாண்ட்ரா வரை: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு நடிகைகள் மீனா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படத்தின் பூஜைக்கான அழைப்பிதழை சமீபத்தில் ஐசரி கணேஷ் சுந்தர். சி மற்றும் குஷ்புவை சந்தித்துக் கொடுத்தார். நயன்தாராவுக்கு கொடுக்கவில்லையா என ரசிகர்கள் அந்த வீடியோ வரவில்லையே என கேட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற படபூஜையில் நயன்தாரா பங்கேற்றுள்ளார்.

வைர மூக்குத்தி பரிசு: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட பூஜைக்கு வந்த தொகுப்பாளினி டிடி நீலகண்டன், பாடகி அருணா உள்ளிட்ட சில பெண் பிரபலங்களுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வைர மூக்குத்தியை பரிசாக வழங்கியதை பார்த்து கோலிவுட்டே ஆடிப்போய் கிடக்கிறது. படத்தின் பட பூஜைக்கே மூக்குத்தியை பரிசாக கொடுக்கிறாரே என தொகுப்பாளினி டிடி நீலகண்டனும் ஐசரி கணேஷை பாராட்டி பேசினார்.

கடவுளே நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த பின்னர் நடிகை நயன்தாராவுக்கு பாராட்டுக்களும் சோஷியல் மீடியாவில் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. அந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் பேசவுள்ள நிலையில், என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மீண்டும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில், கடவுளே நயன்தாரா என அவரது ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











