விடமாட்டாங்க போலிருக்கே.. அந்த விவகாரம்..பிரபல நடிகர் வீடுகளில் ரெய்டு.. விசாரணைக்கு ஆஜராக சம்மன்!
மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகரின் வீடுகளில் போலீசார் ரெய்டு நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுஷாந்த் சிங், தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பாகி இருக்கிறது.
சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவர் சகோதரர் சோவிக் உட்பட சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

பைகுலா சிறை
சுமார் ஒரு மாதமாக பைகுலா சிறையில் இருந்த நடிகை ரியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.

காதலி கேப்ரில்லா
இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் காதலியான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் (Gabriella Demetriades) தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலாளர் கரிஷ்மா
கடந்த மாதம் 27 ஆம் தேதி தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாசின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1.8 கிராம் கஞ்சா உட்பட போதைப் பொருள்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இதனால் அவரை கடந்த மாதம் 28- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

ஷபானா சயீத் கைது
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கிராம் மாரிஜுவானா கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திடீர் சோதனை
இதற்கிடையே, நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான அந்தேரி, பாந்த்ரா, கர் பகுதிகளில் உள்ள வீடுகளில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவர் வீட்டில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதா என்பது பற்றி ஏதும் தெரியவில்லை. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











