இறுகும் பிடி.. சுஷாந்தின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்திய என்சிபி.. ஹுக்கா.. ஆஷ் ட்ரே பறிமுதல்!
மும்பை: மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பண்ணை வீட்டில் என்சிபி நடத்திய அதிரடி சோதனையில் ஹுக்கா மற்றும் ஆஷ் ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மும்பை போலீசார் மற்றும் பாட்னா போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சுஷாந்த் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

வாட்ஸ்அப் சாட்
சிபிஐ விசாரணை தொடங்கியது முதலே சுஷாந்த் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்திக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது அவரது வாட்ஸ் அப் சாட் மூலம் அம்பலமானது.

பண்ணை வீட்டில் பார்ட்டி
இதுதொடர்பாக என்சிபி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் மற்றும் சுஷாந்த் வீட்டு வேலைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. வீட்டு வேலைக்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுஷாந்தின் பண்ணை வீட்டில் அடிக்கடி போதை விருந்து நடைபெறும் என்றும் இதில் ரியா சக்ரவர்த்தி உட்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் பங்கேற்றனர் என்றும் தெரிவித்தனர்.

ஹூக்கா பறிமுதல்
இந்நிலையில் சுஷாந்தின் பண்ணை வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாவானா ஏரி பண்ணை வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு சோதனை நடத்திய போது ஹூக்காக்கள், ஆஷ் டிரேக்கள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் பார்ட்டி
கைப்பற்றப்பட்ட பொருட்களின் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. சுஷாந்த் தனது பண்ணை வீட்டிற்கு மாதம் தோறும் இரண்டரை லட்சம் ரூபாய் வாடகை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சுஷாந்த் அடிக்கடி காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக், வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா, பிளாட்மேட் சித்தார்த் பிதானி மற்றும் பிற நண்பர்களுடன் சேர்ந்து பண்ணை வீட்டில் பார்ட்டி செய்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரியா கைது சிறையிலடைப்பு
ஏற்கனவே போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகை ரியா சக்ரவர்த்தியும் கடந்த 8ஆம் தேதி இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போதை விருந்து
முன்னதாக நடிகை ரியா சக்ரவர்த்தி, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பண்ணை வீட்டில் நடைபெற்ற போதை விருந்தில் ரியா பங்கேற்றது அம்பலமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











