இந்தியன் 2.. மீண்டும் ‘இவர்’ நடிக்கிறார்.. உறுதி செய்த கமல்!
நெடுமுடி வேணு இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்
சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் நெடுமுடி வேணு நடிக்கிறார்.
சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவன் எனக் கூறி சேனாபதியிடம் சிபாரிசுக்கடிதம் வாங்க வந்ததாகக் கூறி இந்தியன் கமலை கைது செய்ய வரும் கிருஷ்ணசாமியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எப்படி இல்லாமல் போகும்? களையெடுக்கிறேன் என்று ஊழல்வாதிகளை சேனாபதி கொல்கிறார் என்றால் அதை மிக நேர்த்தியாகத் தோண்டி எடுப்பதில் அனுபவசாலி என பெயர் பெற்றவர் கிருஷ்ணசாமி. அவர்தான் நெடுமுடி வேணு.

இப்படத்தில் நெடுமுடி வேணு ஏற்று நடித்திருந்த புலன்விசாரணை அதிகாரி கதாப்பாத்திரம் அதிக அனுபவம் வாய்ந்த அதிகாரியின் தோரணையில் இருக்கும். வர்மக்கலை பற்றி அவர் பேசுவது, அதை அறிந்துகொள்ள முற்படுவது என டீட்டெய்லிங் உள்ள கதாப்பாத்திரம். அவ்வப்போது அந்த உருவம் எழுத்தாளர் சுஜாதாவையும் ஞாபகப்படுத்தும்.
இருபது வருடங்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தின் வேலைகளை இயக்குனர் ஷங்கர் ஆரம்பித்துவிட்டார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நெடுமுடி வேணு நடிக்க உள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய கமல்ஹாசன், நெடுமுடிவேணு இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார்.
போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது தெரிந்த விஷயம். இந்தியன் தாத்தா தோன்றும் முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர்.
கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். முதன்முறையாக கமல்ஹாசனுக்கு அனிருத் இசையமைக்கிறார். ஒரே நேரத்தில் இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
லைக்கா புரடொக்ஷன் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கமல் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் முடிந்தவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகும்.


Click it and Unblock the Notifications











