கள்ளக்குறிச்சி ரணமே ஆறல.. அதுக்குள்ள பாட்டில் ராதா ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பா. ரஞ்சித் அண்ட் கோ!
சென்னை: தமிழ் சினிமாவை இயக்குநர் பா. ரஞ்சித்க்கு முன், பா. ரஞ்சித்துக்குப் பின் என பிரித்துப் பார்க்கவேண்டும் என பேசியவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர் இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எடுக்கப்பட்ட படங்கள் பெரும்பாலானவற்றில் அவர்களைக் காக்கும் தலைவர் மாற்று சமூகத்தில் இருந்து வருபவரைப் போலத்தான் காட்டப்பட்டது. சமீபத்தில் வெளியான கழுவேர்த்தி மூக்கன் படத்திலும் கூட இப்படியான கதையம்சம் கொண்ட படமாகத்தான் இருந்தது.
ஆனால் பா. ரஞ்சித் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர்கள் அவர்களில் ஒருவராக அவர்களில் இருந்தே வருவதைப் போல படமாக்கி வருகின்றார். இதுமட்டும் இல்லாமல் சமூகத்தை முற்போக்காக வழிநடத்தும் சித்தாந்தம் என தான் நம்பும் சித்தாந்தத்தையும் படங்களில் காட்சிகளாகவோ, குறியீடுகளாகவோ அல்லது வசனங்களாகவோ காட்சிப் படுத்துக்கின்றார்.

மேலும் இந்த படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என நீரூபித்தும் வருகின்றார். இதன் காரணமாகவே வெற்றி மாறன் தமிழ் சினிமாவை பா. ரஞ்சித்துக்கு முன், பின் என பிரிக்கலாம் என கூறுகின்றார். தனது சினிமாக்களால் முத்திரை பதித்து வந்த வெற்றி மாறன் அசுரன் போன்ற படத்தினை இயக்கி மகுடம் சூடிக்கொண்டார். இவர்கள் வரிசையில், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களும் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்களும் வெளியாகி வெற்றியும் பெறுகின்றது.
தங்கலான்: தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவேது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படம் கோலார் தங்கவயல் தொடர்பாக படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு டப்பிங் எதுவும் இல்லாமல் லைவ் சவுண்ட் ரெக்கார்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. இம்முறையை ஏற்கனவே ரஞ்சித் தனது நட்சத்திரம் நகர்கின்றது படத்திலும் பின்பற்றினார்.
நீலம்: பா. ரஞ்சித், நீலம் புரெடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நீலம் புரெடக்ஷன்ஸ் தயாரிப்பில், முதலில் வெளியான படம், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படம்தான். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், அரசியல் களத்திலும் விவாதத்தை உருவாக்கியது. நீலம் தயாரிப்பில் ஒரு படம் வெளியாகின்றது என்றாலே, சினிமா வட்டாரத்தில் தனி கவனம் பெறும். இதுவரை 7 படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.
பாட்டில் ராதா: இந்நிலையில், நீலம் புரெடக்ஷன்ஸின் 8வது படமாக தினகரன் சிவலிங்கம் அறிமுக இயக்குநராக அறிமுகமாகும், பாட்டில் ராதா என்ற படத்தை தயாரிக்கவுள்ளது. பலூன் பிக்சர்ஸும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நீலம் இன்று அதாவது ஜூன் 24ஆம் தேதி வெளியிட்டது. இதில், மது பாட்டிலுக்குள் நடிகர் குருசோமசுந்தரம் அரியாசனம் அமைத்து கையில் மதுவை ஏந்தியபடி அமர்ந்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கின்றார். படம் தமிழ், மலையாளத்தில் ரிலீசாகவுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம்: நீலம் புரெடக்ஷனின் இந்த போஸ்ட்டுக்கு ஒருவர், பாட்டில் மணி என டைட்டில் வைத்திருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். கள்ளக் குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டினை உலுக்கி வரும் நிலையில், நீலம் தரப்பில் இருந்து இவ்வாறு போஸ்டர் ரிலீஸ் செய்திருப்பது, விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. மேலும், நீலம் தரப்பில் இருந்து ஒரு படம் வருகின்றது என்றால், அதில் ஏதாவது ஒரு சமூகக் கருத்து இருக்கும் எனவும் பேச்சுகளும் அடிபடுகின்றது.


Click it and Unblock the Notifications











