வயது வித்தியாசம் விஷயம் இல்லை.. திருமணம் செய்துகொண்டால் க்ரிஞ்சா?.. நீலிமா ராணி ஓபன் டாக்
சென்னை: நடிகை நீலிமா ராணி வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இரண்டு குழந்தைகள். 10 வயது வித்தியாசத்தில் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனையடுத்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே தோன்றி நடித்துவந்தார். இப்படிப்பட்ட சூழலில் சின்னத்திரையிலும் அறிமுகமானார் நீலிமா ராணி. சின்னத்திரை அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

நெடுந்தொடர்கள்: தொடர்ந்து சின்னத்திரையில் பல நெடுந்தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் நீலிமா. அப்படி அவர் நடித்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட சீரியல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. முக்கியமாக நீலிமா ராணிக்கு மெட்டி ஒலியும், கோலங்கள் நெடுந்தொடரும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
தமிழ் திரைப்படங்களில்: ஒருபக்கம் சீரியல்களில் பிஸியாக நடித்துவந்த அவர் மறுபக்கம் திரைப்படங்களிலும் தலை காண்பிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் அவருக்கு நடிப்பதற்கான ஓரளவு ஸ்பேஸ் கிடைத்தது. கடைசியாக அவர் ஆகஸ்ட் 16, 1947 படத்தில் கௌதம் கார்த்திக்கிறகு அம்மாவாக நடித்தார். படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அவரது நடிப்பு கவனிக்கும்படி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்: நிலீமா ராணி காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் பெயர் இசைவாணன். இசைவாணன் திரைத்துறையில் இல்லாவிட்டாலும் திரைப்படம் தயாரிக்க ஆசைப்பட்டார். இதற்காக நீலிமா ராணியும், அவரும் இணைந்து ஒரு படத்தை தயாரித்தனர். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றது. அதன் காரணமாக கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் கடன் ஆனது. அதை சமீபத்தில்தான் அடைத்து முடித்தோம் என ஒரு பேட்டியில்கூட நீலிமா தெரிவித்திருந்தார்.
நீலிமா ராணி பேட்டி: இந்நிலையில் திருமணம் குறித்து நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், "எனது கணவர் இசைவாணனை எனக்கு கடந்த 20 வருடங்களாக தெரியும். எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தது அவர்தான். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் புரிதலுக்கான முக்கிய காரணம் வயது வித்தியாசம்தான். 10 வயது வித்தியாசம் இருந்தால் வயதில் மூத்தவர் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த வயது வித்தியாசம் இருப்பதால் ஒருவர் பக்குவமாகவும், இன்னொருவர் அரைகுறையாவும் இருப்பார். அப்படி இருக்கும்போது அவர்களுக்குள்ளான பேலன்ஸ் ஒர்க் அவுட் ஆகும்.
வாழ்க்கை சொதப்பல்: இரண்டு பேருமே பக்குவமாக இருந்தால் வாழ்க்கை சொதப்பலாக போய்விடும். அதேநேரத்தில் பக்குவமாக இல்லை என்றாலும் சொதப்பலாகத்தான் முடியும். அதனால் கணவன், மனைவிக்குள் வயது வித்தியாசம் இருக்க வேண்டும். திருமணம் செய்து ஒருவருடன் வாழ்வதை இப்போது க்ரிஞ்ச் என்கிறார்கள். அது உண்மையில் தவறான விஷயம்" என்றார்.


Click it and Unblock the Notifications











