'வேலைக்காரன்' படத்தில் வெளிப்பட்ட டி.வி நிகழ்ச்சியின் குட்டு!
சென்னை : மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான 'வேலைக்காரன்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வேலைக்காரன் படத்தில் உணவு அரசியலையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அப்பாவி மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கடுமையாகப் பேசியிருக்கிறார்கள்.
வேலைக்காரர்கள் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வேலைக்கு மட்டும் விசுவாசமாக இருந்தால் போதும் எனும் கருத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நீயா நானா நிகழ்ச்சி
சமீபத்தில் வெளிவந்த 'அருவி' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கலாய்த்தது போல 'வேலைக்காரன்' படத்தில் கோபிநாத்தின் 'நீயா நானா' நிகழ்ச்சியை கொஞ்சம் ஓட்டியிருக்கிறார்கள்.

நயன்தாரா கலந்துகொள்ளும் விவாத நிகழ்ச்சி
பெண்கள் கலந்துகொள்ளும் ஒரு விவாத நிகழ்ச்சி இப்படத்தில் காட்டப்படுகிறது. அதில் ஒரு எபிஸோடில் ஆவணப் பட இயக்குநராக வரும் நயன்தாரா கலந்துகொள்கிறார். அவர் நிகழ்ச்சியில் பேசும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின்றன.

ஆவணப் பட இயக்குநராக நயன்தாரா
நயன்தாராவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் தெறிக்க விடுகிறார்கள். அவரது கேரக்டரை தவறாக சித்தரிக்கிறார்கள். நயன்தாரா தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு வெளியே இளைஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

விவாத நிகழ்ச்சியின் முகத்திரை கிழிப்பு
நயன்தாரா பேச்சை தான் நடத்தும் 'குப்பம் எஃப்.எம்'மிலும் கலாய்ப்பார் சிவகார்த்திகேயன். பிறகு, உண்மை தெரிந்து நயன்தாராவின் பிரச்னையை தீர்ப்பதற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களைத் தேடிப் பிடித்து உண்மையைக் கண்டுபிடிப்பார்.

நிகழ்ச்சி சித்தரிப்பு
அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேசிய நல்ல கருத்துகளையெல்லாம் விட்டுவிட்டு நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-க்காக சர்ச்சைக்குரியவற்றை மட்டும் ஒளிபரப்பி இருப்பார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை நடிக்க வைத்த விஷயமும் தெரியவரும்.

வைரலாகும் வீடியோ
அவர்களை ஒரு வீடியோவில் உண்மையைப் பேசவைத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவார். நயன்தாராவை திட்டியவர்கள் பலரும் இந்த வீடியோவைப் பார்த்து மன்னிப்பு கேட்பார்கள். இந்தச் சம்பவம் மூலம் நயன்தாராவுக்கு நெருக்கமாவார் சிவா.

பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
இதே போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு 'நீயா நானா' நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண்ணின் கருத்துகளுக்கு எதிராக தவறாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பலர் பொங்கினர்.


Click it and Unblock the Notifications











