Jailer: 72 வயதில் சாதனை படைத்த ரஜினி.. ஜெயிலர் 13வது நாள் வசூல்.. மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 13 நாட்களான நிலையில் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடித்த படங்கள் எதுவும் வெளியாகாததால், ரசிகர்கள் ஜெயிலர் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதால், வசூலை அள்ளி வருகிறது.

ஜெயிலர் படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி பதிப்புகள் என திரையிடப்பட்ட திரையரங்குகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த்: அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் அப்பாவி அப்பாவாக வந்த முத்து, மகனை கொன்றவர்களை பழிவாங்கும் போது முத்துவேல் பாண்டியனாக மாறி மாஸ் காட்டி உள்ளார். சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நெல்சனின் டார்க் காமெடி வொர்க் அவுட்டாகி உள்ளது.
முத்துவேல் பாண்டியன்: படம் சற்று வன்முறையாக இருந்தாலும், அதிரடியாக சண்டை போடும் ரஜினியை திரையில் பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போனார்கள். இந்த படத்தில் ரஜினியின் ஸ்டைலை பார்க்கும் போது படையப்பா படத்தில் நீலாம்பரி சொல்லும், வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையல என்ற வசனம் தான் நினைவிற்கு வருகிறது.
அதிரடியான வசூல்: 10ந் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படம் முதல் நாளிலேயே வசூலை அள்ளியது. அடுத்தடுத்த நாளில் படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே சென்றதால், தயாரிப்பு நிறுவனம் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தது. இதையடுத்து முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ஜெயிலர் 375 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

13 நாள் வசூல்: இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் 13ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, ஜெயிலர் திரைப்படம் செவ்வாய் கிழமையான நேற்று உலக அளவில் 4.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதன்படி இப்படம் 540 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
72 வயதில் சாதனை: ஜெயிலர் படம் 700 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் வாரத்தைவிட இரண்டாம் வாரத்தின் வசூல் சற்று மந்தமானதால், இந்த வசூலை எட்டமுடியவில்லை. ரஜினிகாந்த் உபி முதல்வர் காலில் விழுந்தது தான் இந்த திடீர் சரிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால், ரஜினி ரசிகர்களோ வேலைநாட்கள் என்பதால் இந்த சரிவு என கருத்துக்கூறி வருகின்றனர். எது எப்படியோ 72 வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு புதிய சாதனை படைத்துவிட்டார் என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications











