Nelson Dilipkumar - அவமானப்படுத்தப்பட்டாரா நெல்சன் திலீப்குமார்?.. அன்று நடந்தது என்ன?
சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) விருது வழங்கும் விழாவில் அவமானப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து நெல்சன் திலீப்குமார் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கிக்கொண்டிருந்த நெல்சன் திலீப்குமார் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை ஆரம்பித்தார். ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனையடுத்து மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற அவர் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக இயக்கி கவனம் ஈர்த்தார். அதனையடுத்து நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்தார்.

டாக்டர், பீஸ்ட்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டார்க் காமெடி ஜானரில் டாக்டர் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. மூன்றாவதாக விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக நெல்சன் திலீப்குமாரை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவும் செய்தனர்.
கம்பேக் கொடுத்த நெல்சன்: பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே ரஜினியை வைத்து இயக்க கமிட்டான நெல்சனை சுற்றி பீஸ்ட் ரிசல்ட்டுக்கு அடுத்ததாக நெகட்டிவ் டாக் ஓடிக்கொண்டிருந்தது. அதனால் ஜெயிலர் படத்திலிருந்து அவரை தூக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் நெல்சன் மீது நம்பிக்கையை இழக்காத ரஜினி அவரையே இயக்குநராக இறுதி செய்தார். படமும் கடந்த பத்தாம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ரஜினி, நெல்சன் இருவருமே கம்பேக் கொடுத்திருக்கின்றனர்.
அவமானம்: திரைத்துறையில் ஒரு படம் தோல்வி கொடுப்பது இயல்புதான். அதேபோல்தான் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட்டில் சொதப்பினார். உடனே அவருக்கு சினிமாவே வராது என்பது போல் பலரும் கேலி பேசினர். சமூக வலைதளங்களில் அவ்வாறு பேசுவதைகூட கடந்துவிடலாம் ஆனால் விருது வழங்கும் விழா ஒன்றுக்கு செல்லும்போது நெல்சனை அங்கிருந்த பவுன்சர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அந்த வீடியோவை அதிகம் பேர் பகிர்ந்து, ஒரு படம் தோல்வியடைந்தால் அதற்காக இப்படியா நடத்துவார்கள் என கண்டனங்களையும் தெரிவித்தனர்.
மௌனம் கலைத்த நெல்சன்: அந்த விஷயம் குறித்து நெல்சன் திலீப்குமார் அமைதியாகத்தான் இருந்தார். ஏன் அந்த விழா மேடையிலேயேகூட தனக்கேயுரிய பாணியில் செம ஜாலியாக பேசிவிட்டு சென்றார். தற்போது ஜெயிலர் வெற்றி பெற்றிருக்கும் சூழலில் அந்த சம்பவம் குறித்து மௌனம் கலைத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அதெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த விழாவின் பரபரப்பில் அதுகுறித்தெல்லாம் கவனித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களின் வேலையை அவர்கள் செய்தார்கள். நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டு போயிட்டே இருக்கணும். இதையெல்லாம் யோசிக்கக்கூடாது. அதில் அவமானமோ வேறு எதுவுமோ இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











