Beast 2 - என்னது பீஸ்ட் 2வா?.. இப்போதானே நெல்சன் கம்பேக் கொடுத்தீங்க.. அதுக்குள்ளவா?
சென்னை: Beast 2 (பீஸ்ட் 2) பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க ஐடியா இருப்பதாக நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கிக்கொண்டிருந்த நெல்சன் திலீப்குமார் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை ஆரம்பித்தார். ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனையடுத்து மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற அவர் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக இயக்கி கவனம் ஈர்த்தார். நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருதுகள் வழங்கும் விழாவையும் இயக்கினார். அதனையடுத்து நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்தார்.

டாக்டர், பீஸ்ட்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டார்க் காமெடி ஜானரில் டாக்டர் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. மூன்றாவதாக விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக நெல்சன் திலீப்குமாரை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவும் செய்தனர்.
அவமானம் சந்தித்த நெல்சன்?: திரைத்துறையில் ஒரு படம் தோல்வி கொடுப்பது இயல்புதான். அதேபோல்தான் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட்டில் சொதப்பினார். உடனே அவருக்கு சினிமாவே வராது என்பது போல் பலரும் கேலி பேசினர். சமூக வலைதளங்களில் அவ்வாறு பேசுவதைகூட கடந்துவிடலாம் ஆனால் விருது வழங்கும் விழா ஒன்றுக்கு செல்லும்போது நெல்சனை அங்கிருந்த பவுன்சர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால் அங்கு தான் அவமானப்படவில்லை என்று நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெளிவுப்படுத்தியிருந்தார்.
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார்: பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அவர். அதன் காரணமாக ஜெயிலரில் வெறித்தனமாக உழைத்தார். படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி வசூலை அள்ளிவருகிறது. இதனால் ரஜினியும் ஹேப்பி, நெல்சன் திலீப்குமாரும் ஹேப்பி. இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் தனது அடுத்தக்கட்ட ஐடியா குறித்து பேசியிருக்கிறார்.
என்ன ஐடியா?: அந்தப் பேட்டியில் பேசிய நெல்சன் திலீப்குமார், "ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஒரு ஐடியா இருக்கிறது. அந்தப் படம் மட்டுமின்றி கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டம் இருக்கிறது" என்றார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஏன் நெல்சன் இப்போதான் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுத்தீர்கள். அதற்குள் ஏன் பீஸ்ட் படத்தை மீண்டும் தொடுகிறீர்கள். இதெல்லாம் தேவையில்லாத வேலை என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
இதற்கிடையே நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக தனுஷை வைத்து கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











