ஜெயிலர் 2 அப்டேட் எப்போ வரும்?.. செம பதில் சொன்ன நெல்சன் திலீப்குமார்.. ரசிகர்களுக்கு ட்ரீட்தான்
சென்னை: கோலிவுட்டின் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் நெல்சன் திலீப்குமார் முக்கியமானவர். இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கும் அவர் டார்க் காமெடி என்ற ஜானரை சிறப்பாக கையாண்டுவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை அவர் எடுக்கவிருப்பதாக கூறப்பட்ட சூழலில் அதுகுறித்து அவரே ஒரு விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், விஜய் டிவியில் பணிபுரிந்தவருமான நெல்சன் திலீப்குமார் சிம்பு, ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார். ஆனால் ஏதோ காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனையடுத்து மீண்டும் விஜய் டிவிக்கே சென்ற நெல்சன் அங்கு பல நிகழ்ச்சிகளை இயக்கிக்கொண்டிருந்தார்.

கோலமாவு கோகிலா: சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரும் ஹிட்டானது. யோகிபாபுவும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் கவனம் ஈர்த்ததால் நெல்சன் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாறினார்.
டாக்டர்: இதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருந்தார். அர்ச்சனா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூல் செய்தது. மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த டார்க் காமெடி காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரோஸ்ட்டான பீஸ்ட்: முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்ததால் விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு அமைந்தது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் நெல்சன் திலீப் குமார் ட்ரோல் மெட்டீரியல் ஆனார். அதுமட்டுமின்றி, விஜய் என்ற ஸ்டாரை மட்டும்தான் நெல்சன் நம்பியிருக்கிறார். கதை என்ற ஒன்று இல்லவே இல்லை எனவும் பலர் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.
ஜெயிலர்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக நெல்சன் திலீப்குமாருக்கும், ரஜினிகாந்த்துக்கும் தரமான கம்பேக்காக அமைந்தது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்ததாக கூறப்பட்டது. இதனால் நெல்சன் திலீப்குமார் உச்சக்கட்ட உற்சாகத்துக்கே சென்றிருக்கிறார்.
ஜெயிலர் 2: சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் அதுகுறித்து கேட்கப்பட்டபோது, "ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் பற்றிய அப்டேட் இன்னும் ஒரு மாதத்துக்குள் வரும். அதனை தயாரிப்பு நிறுவனத்தினரே அதிகாரப்பூர்வமாக சொல்வார்கள்" என்றார். இதனால் ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











