பாதியில் நிறுத்தப்பட்ட வேட்டை மன்னன்... கையிலெடுக்கிறாரா சிம்பு?
சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கிவந்த படம் வேட்டை மன்னன்.
இந்தப் படம் நிதி நெருக்கடி காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதையடுத்துதான் கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் மற்றும் ரஜினியின் 169வது படம் என பிசியாகியுள்ளார் நெல்சன்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படம் மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக கோலிவுட்டில் நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார். அது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மனிதக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான அந்தப்படம் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது.

விஜய்யின் பீஸ்ட் படம்
இந்நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல் பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளது. அதைவிட முக்கியமாக பாடலுக்கான ப்ரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சிறப்பான ப்ரமோ
தன்னுடைய படங்களின் பாடல்களை ப்ரமோட் செய்யும் வகையில் முன்னதாக சிறப்பான ப்ரமோக்களை வெளியிட்டு வருகிறார் நெல்சன். அந்தவகையில் இந்த பாடலுக்கான ப்ரமோவில் விஜய் நேரடியாக இடம்பெறாவிட்டாலும் அவருடைய வாய்ஸ் பயன்படுத்தப்பட்டது. ரசிகர்கள் அதை மிகவும் என்ஜாய் செய்தனர்.

முதல்படம் வேட்டை மன்னன்
முன்னதாக விஜய் டிவியில் ஷோக்களை இயக்கிவந்த நெல்சன், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். சில மாதங்கள் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. இதையடுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டது. நிதி நெருக்கடியே காரணமாக கூறப்பட்டது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்தப் படத்தின் போஸ்டர்களும் அந்த நேரத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக வேட்டை மன்னன் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை மீண்டும் துவங்க சிம்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி படத்திற்கு பிறகு வேட்டை மன்னன்?
விஜய் படத்திற்கு பிறகு ரஜினியின் 169வது படத்தை நெல்சன் இயக்கவுள்ள நிலையில் அதை தொடர்ந்து வேட்டை மன்னன் படத்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் சக்ரவர்த்தி உறுதி
இதனிடையே இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியும் சமீபத்திய பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார். வேட்டை மன்னன் மீண்டும் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். படத்திற்கான பட்ஜெட் கொஞ்சம் அதிகம் என்பதால் அதை நிறுத்தி வைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

முக்கியமான இயக்குநர்
தொடர்ந்து தான் சந்தித்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் நெல்சன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்போ விரைவில் வேட்டை மன்னன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அந்தப் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது மிகவும் சீரியசான படமாக காணப்படுகிறது. காமெடியை தூக்கலாக தனது படங்களில் பயன்படுத்தும் நெல்சன் இந்தப் படத்தை எப்படி எடுப்பார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











