சென்னை வீட்டை வித்துட்டு அமெரிக்காவுக்கு போக காரணமே இதுதான்.. பாரதிராஜா மாற்றிய பெயர் - நெப்போலியன்!
சென்னை: சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு தனது மகன் தனுஷின் சந்தோஷத்திற்காக அனைத்து தியாகத்தையும் செய்த ஒரு சிறந்த அப்பாவாக திகழ்கிறார் நடிகர் நெப்போலியன். தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும், துணை நடிகராகவும் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களையும் சினிமா நடிகர்களின் உறவுகளையும் சம்பாதித்துள்ளார்.
மகனின் திருமணத்தை ஜப்பானில் வைத்தாலும், ஏகப்பட்ட பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்த காரணமே பணத்தையும் அந்தஸ்த்தையும் தாண்டி அவருடைய நல்ல குணம் தான் என்பது அவர் பேசுவதை பார்த்தாலே தெரிந்து விடும்.

தனக்கு நெப்போலியன் என பெயர் வைத்ததே பாரதிராஜா தான் என்றும் ஆரம்பத்தில் சரக்கு பாட்டில் பெயராக உள்ளதே என நினைத்தேன் என்றும் நண்பர்கள் கிண்டல் செய்தார்கள் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார் நெப்போலியன்.
மகன் திருமணத்தில் கண்கலங்கிய நெப்போலியன்: பல கேலிகளையும் கிண்டல்களையும் விமர்சனங்களையும் கடந்து தனது மகன் தனுஷுக்கு வெற்றிகரமாக அக்ஷயாவுடன் ஜப்பானில் திருமணத்தை நெப்போலியன் நடத்தி வைத்த நிலையில், அவர் கண்கலங்கியதை பார்த்து ரசிகர்கள் பலரும் எமோஷனல் ஆகிவிட்டனர்.
அமெரிக்கா செல்ல காரணமே தனுஷ் தான்: சென்னை வீட்டை விற்று விட்டு அமெரிக்கா செல்ல முழுக்காரணமே என் மகன் தனுஷ் தான். சென்னையில், வீல் சேர் ஆக்சஸ் கொண்ட பள்ளிகள் இல்லை, எங்கே சென்றாலும் தனுஷை தூக்கிக் கொண்டே செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதையெல்லாம் பார்த்த தனுஷ் அப்பா இந்த ஆக்சஸ் எல்லாம் அமெரிக்காவில் உள்ளது. நாம அங்கே போய்விட்டால் உங்களுக்கு சிரமம் இருக்காது. பள்ளிகளிலும் என்னை யாரும் கிண்டல் செய்யமாட்டார்கள் என தனுஷ் சொன்ன நிலையில் தான் சென்னையை விட்டு அமெரிக்காவுக்கு செல்ல முடிவு செய்தேன் என நெப்போலியன் பேசியுள்ளார். அதே போல தனுஷ் ஆசைப்பட்டபடியே ஜப்பானிலும் திருமணம் செய்து வைத்துவிட்டேன் என்றார்.
பாரதிராஜா தான் பெயரை மாற்றினார்: குமரேசன் எனும் என்னுடைய பெயரை என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா தான் மாற்றினார். நெப்போலியன் என அவர் பெயர் வைத்ததும் கிறிஸ்டியன் பெயராக இருக்கிறதே என்றும் பாட்டில் பெயராக இருக்கிறதே என்றும் தான் நினைத்தேன். ஆனால், அவர் பெயர் வைத்து விட்டால் மாற்ற முடியுமா? வாய்ப்புக் கொடுப்பவராச்சே என தனது பெயர் மாறியது குறித்து நெப்போலியன் பேசியுள்ளார். அப்போது தன்னுடைய நண்பர்கள் பாட்டில் பெயர்களை வைத்து கலாய்த்தனர். ஹாலிவுட் வரை நடிக்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு பெயரை வைத்திருக்கிறார் என சும்மா சொன்னேன். ஆனால், அமெரிக்கா போன பின்னர் 4 ஹாலிவுட் படங்களிலேயே நடித்து விட்டேன் என்றார்.
மூத்த வயது நடிகைகளுடன்: பொதுவாகவே நடிகர்கள் தன்னை விட இளம் வயது ஹீரோயின்களுடன் தான் நடிப்பார்கள். நீங்கள் என்னை விட இளம் வயது என்னுடன் ஜோடி போட்டு நடித்தது எப்படி இருந்தது என சுஹாசினி கேள்வி கேட்க, நீங்க, ராதிகா மேடம் எல்லாமே என்னை விட அதிக வயது தான். அப்போதெல்லாம் அதை பற்றியெல்லாம் தெரியாது. சினிமா வாய்ப்புக் கிடைப்பதே பெரிய விஷயம். வாய்ப்புக் கிடைத்தால் நடிக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். ஆனால், தொடர்ந்து வயதான கதாபாத்திரங்கள் வரும் போது தான் கொஞ்சம் சுதாரித்து அப்பா, தாத்தா கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்கக் கூடாது என நினைத்தேன். ரஜினிகாந்த் என்னை விட பெரியவர் அவருடன் எஜமான் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த படத்திலும் அவரை விட ஒரு நாள் மூத்தவராக நடித்திருப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications











