Nepolean - அவர் பிறந்தநாள் மட்டுமில்லை மனைவி பிறந்தநாளும் கோலாகலம்தான்.. நெப்போலியன் பகிர்ந்த சூப்பர் வீடியோ
சென்னை: நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகர் ஆவார். பல படங்களில் நடித்திருக்கும் அவர் அரசியல்வாதியாகவும் ஜொலித்தவர். சமீபத்தில் அமெரிக்காவில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு மீனா, குஷ்பூ உள்ளிட்டோர் சென்றிருந்தனர். தற்போது அவருடைய மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
குமரேசன் என்ற இயற்பெயரை கொண்ட நெப்போலியன் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு சினிமா ஆசை துளிர்விட முதல் படமே பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்தது பாரதிராஜாதான் என்பது கவனிக்கத்தக்கது.

தொடர் வாய்ப்புகள்: பாரதிராஜாவின் அறிமுகம் என்றாலே யாரும் சோடை போனதில்லை என்பதற்கான இன்னொரு உதாரணம்தான் நெப்போலியன். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது சாமானியத்தனமான குரலாலும், அழகாலும் ரசிகர்களை ஈர்த்தார்.
ஒரே வருடத்தில் பல படங்கள்: 1991ஆம் ஆண்டு அறிமுகமான நெப்போலியனுக்கு அடுத்த வருடமான 1992ஆம் ஆண்டு ஜோராக அமைந்தது. அந்த வருடத்தில் மட்டும் சின்னத்தாயி, பரதன், நாடோடி தென்றல், ஊர் மரியாதை, இது நம்ம பூமி, முதல் சீதனம், தலைவாசல், பங்காளி, அபிராமி என மொத்தம் 9 படங்கள் நடித்து படு பிஸியாக வலம் வந்தார். அது மற்ற நடிகர்களை ஆச்சரியப்படுத்தியது என்பதுதான் உண்மை.
எஜமான்: அதேபோல்தான் 1993ஆம் ஆண்டும் அவருக்கு அமைந்தது. அந்த வருடத்தில்தான் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக எஜமான் படத்தில் நடித்தார். வல்லவராயன் என்ற கதாபாத்திரத்துக்கு தனது மிகச்சிறந்த நடிப்பால் உயிர் கொடுத்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருப்பார். தொடர்ந்து அவர் நடித்த கிழக்கு சீமையிலே படமும் அவரது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக உருமாறி நிற்கிறது.
சீவலப்பேரி பாண்டி: கிழக்கு சீமையிலே படத்தில் பாசக்கார மச்சானாகவும், கோபக்கார கணவனாகவும் தனது நடிப்பில் அதகளம் செய்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் சீவலப்பேரி பாண்டி படம் வெளியானது. பிரதாப் போத்தன் இயக்கிய அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.குறிப்பாக. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பியாகவும்; மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
அமெரிக்காவில் செட்டில்: ஒருகட்டத்தில் தனது மகனுக்கு தசை சிதைவு நோய் வர இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு தனது மகனுக்கு சிகிச்சை அளித்து அவருக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார். அவ்வப்போது இந்தியா வரும் அவர் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். மகன் தனுஷ் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் நெப்போலியன்.
பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்த சூழலில் நெப்போலியனின் 60ஆவது பிறந்தநாள் சமீபத்தில் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. அதில் மீனா, குஷ்பூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவரது மனைவி ஜெயசுதாவின் 51ஆவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதுதொடர்பான வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, எனது மனைவியின் பிறந்தநாள் அமெரிக்காவில் எனது உறவினர்களுடன் கொண்டாட்டப்பட்டது என தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் நெப்போலியனின் மனைவிக்கு பிறந்தநநாள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











