நேர்கொண்ட பார்வை.. தல பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன்!
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் பாடல் எதுவும் பாடவில்லை என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: நேர்கொண்ட பார்வை படம் தொடர்பாக இணையத்தில் பரவிய வதந்திக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியில் வெளியான பிங்க் படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாராகி வருகிறது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, முதல்கட்ட எடிட்டிங்கும் முடிந்து விட்டது. சமீபத்தில் யுவனின் ரெக்கார்டிங் தியேட்டரில் இசைக்கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து அஜித்தும் படம் பார்த்துள்ளார்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஒரு பாடல் பாடியிருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் பரவியது. இதற்குக் காரணம் பிங்க் படத்தில் அமிதாப் ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடியிருந்தார். எனவே, ரீமேக்கில் அவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்தும் அதே போல், ஒரு பாடல் பாடியிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இச்செய்தியை படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா மறுத்துள்ளார். அப்படி ஒரு ஐடியா குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை. அஜித்திடம் இது பற்றி நாங்கள் பேசவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











