சினிமாவின் சகாப்தம்.. சத்யஜித் ரேவின் 100 ஆண்டுகளை கொண்டாடும் நெட்பிளிக்ஸ்.. ரே டீசர் ரிலீஸ்!
மும்பை: இயக்குநர் சத்யஜித் ரேவின் 100வது ஆண்டை கொண்டாடும் வகையில் நெட்பிளிக்ஸில் ரே எனும் ஆந்தாலஜி சீரிஸ் உருவாகி உள்ளது.
3 இயக்குநர்கள் இயக்கத்தில் 4 வித்தியாசமான கதைகள் திறமையான நடிகர்களின் நடிப்பில் உருவாகி உள்ளது.
ரே ஆந்தாலஜியில் இடம்பெறும் கதைகளின் டைட்டிலை வெளியிடும் விதமாக புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் அதன் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளது.

100 ஆண்டுகள்
1921ம் ஆண்டு மே 2ம் தேதி பிறந்த சத்யஜித் ரே கடந்த 1992ம் ஆண்டு தனது 70வது வயதில் காலமானார். இந்திய சினிமாவின் இணையில்லா இயக்குநர் சத்யஜித் ரே பிறந்து 100 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரே எனும் ஆந்தாலஜியை உருவாக்கி உள்ளது.

சத்யஜித் ரே கதைகள்
அபிஷேக் செளபே, ஸ்ரீஜித் முகர்ஜி மற்றும் வாசன் பாலா ஆகிய மூன்று இயக்குநர்கள் இயக்கத்தில் 4 தனிக் கதைகளாக இந்த ரே ஆந்தாலஜி உருவாகி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 4 கதைகளும் சத்யஜித் ரேவின் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர்கள்
பாலிவுட்டின் சிறந்த நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், அலி ஃபஸல், கே கே மேனன், ஹர்ஷவர்தன் கபூர், ஸ்வேதா பாசு மற்றும் ராதிகா மதன் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் இந்த ஆந்தாலஜியில் நடித்துள்ளனர். ஃபார்கெட் மி நாட், பஹ்ருபியா, ஹங்காமா ஹை கியோன் பர்பா மற்றும் ஸ்பாட்லைட் என 4 கதைகளுக்கும் தனித்தனி டைட்டில்களும் உள்ளன.

எப்போ ரிலீஸ்
ரே ஆந்தாலஜியின் நடிகர்கள் மற்றும் தலைப்புகள் குறித்த அறிவிப்புடன் புதிய டீசரை தற்போது நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், வரும் ஜூன் 25ம் தேதி இந்த ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சத்யஜித் ரேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ஆந்தாலஜி உருவாக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாஜ்பாய்
ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள மனோஜ் பாஜ்பாயின் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அந்த வெப் தொடர் வெளியாகுமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் நெட்பிளிக்ஸில் அவர் நடித்துள்ள ரே ஆந்தாலஜி வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











