Kavin: ஆணவ படுகொலையை ஆதரிப்பவர்களுக்கு பளார் விட்ட கோபி - சுதாகர் வீடியோ.. குவியும் பாராட்டு!
சென்னை: கடந்த ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியின் மகன் சுர்ஜித்தால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தனது அக்கா சுபாஷினியும் கவின் செல்வகணேஷும் காதலித்து வந்ததால் கவின் செல்வகணேஷை ஆணவப் படுகொலை செய்ததாக கூறி, பாளையங்கோட்டை காவல் துறையில் சரண்டர் ஆனார் கொலையாளி சுர்ஜித். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் தங்களது ஸ்டையில், ஆணவக்கொலைகளை ஆதரிப்பவர்களுக்கு பளார் விடும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதற்கு இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
கடந்த 27ஆம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர்கள் எடுத்த முடிவானது, அவரது ஆணவப்படுகொலை குறித்த பேச்சை தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாற்றியது. இந்த விவகாரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களை களத்துக்கு அனுப்பாமல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.என். நேருவை அனுப்பியது. கவின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்களுக்குப் பின்னரே வந்தார்.

மொத்தனம்: இந்த ஆணவப் படுகொலைக்கு பின்னர், அது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் மெத்தனப்போக்காகவே இருந்தது. இதுவே ஆளும் திமுக அரசுக்கு காலத்திற்கும் அழியாத அவப்பெயர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சிலர் ஆணவப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசினார்கள். அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. தமிழ்நாடு அரசு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலரும் முன் வைத்தனர். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.
பரிதாபங்கள்: இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் தங்களது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் அந்த வீடியோவில் ஆணவப்படுகொலையை ஆதரிப்பவர்களுக்கு பளார் விடுவது போன்று காட்சிப்படுத்தியது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வெளிப்படையாகவே பேசினார்கள்.

சாதி வெறியர்கள்: அதாவது ஆதிக்க மனநிலையில் இருக்கும் சாதி வெறியர்கள், தாங்கள் சார்ந்த சாதியில் இருக்கும் இளைஞர்களை எப்படி எல்லாம் மூளைச்சலவை செய்து, அவர்களை கொலையாளிகளாக மாற்றுகிறார்கள். அந்த சாதி வெறியர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு கொலை செய்துவிட்டு வந்தால், சாதி வெறியர்கள் அந்த இளைஞர்களை எப்படி கையாளுகிறார்கள் என்பதையும் கோபி சுதாகர் காட்சிப் படுத்தியுள்ளது பாராட்டுக்குரியதாக உள்ளது. மேலும் வீரம்'னா எதிர்ல இருக்கறவன்கிட்டயும் கத்தியைக் கொடுத்து, ரெண்டு பேரும் நேருக்கு நேர் மோதவேண்டியதுதானே? முகத்தில் மிளகாய் பொடியை அடித்துவிட்டு முதுகில் குத்தி இருக்க நீ வீரனாடா? எனக் கேட்பது எல்லாம் கள எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வார்த்தைகள். சாதி, மதம், பாலினம், பொருளாதாரம் என எந்த வடிவில் ஆதிக்கம் இருந்தாலும் அவை துடைத்தெறியவேண்டியவை. சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் வெளியிட்டுள்ள வீடியோ பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications











