Neeya Naana: அன்று காமெடியா தெரிஞ்ச பையன்.. இன்று அழகா தெரியுறான்.. ஆண்ட பரம்பரை to பிறப்பால் அனைவரும் சமம்
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி நீயா நானா. விவாத நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சி தமிழ் சமூகத்தின் மத்தியில் கடந்த சில தசாப்தங்களாக பல நுட்பமான வேலைகளைச் செய்துள்ளது. குறிப்பாக தவறை தவறு என்று பொட்டில் அறைந்ததைப் போல கூறியுள்ளது. மிகச் சரியானதை மெச்சி பெருமை சேர்த்து, ஊக்குவித்துள்ளது. தமிழ் ஊடக வரலாற்றில் நீயா நானா நிகழ்ச்சிக்கு எப்போதுமே தனி அங்கீகாரம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கலந்து கொண்ட இளைஞன் ஒருவர், தான் பிறந்த சாதிதான் உயர்ந்த சாதி. நாங்கள் ஆண்ட பரம்பரை. ஆண்ட பரம்பரை என்றால் நாங்கள் இப்படித்தான் நடப்போம், உட்காரும்போதே நாங்கள் மன்னர்களைப் போல தான் அமர்வோம் என்றெல்லாம் பேசினார். மிகவும் இளம் வயதுடைய அந்த இளைஞனுக்கு எதிரே அமர்ந்திருந்தவர்கள், அவரது புரிதலைப் பார்த்து கவலைப் பட்டதுடன், அவரது புரிதல் தவறு என்றும், அவர் இப்படி நடந்து கொள்வதும் தவறு என்றும் கூறினார்கள். இவரது இந்த பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பார்த்து பலரும் சிரித்தார்கள்.

மனப்போக்கு: ஆனால் அந்த இளைஞரோ, அவற்றையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தான் பேசுவது சரி, தான் செய்வது தான் சரி, தான் நடந்து கொள்வதுதான் சரி என்ற மனப்போக்கில் இருந்தார். இன்னும் சொல்லப்போனால், தான் பிறந்த மற்றும் தான் சார்ந்த ஜாதிதான் உயர்ந்த ஜாதி என்ற மனநோய் அவரிடத்தில் இருந்தது. இவரை எதிர் திசையில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர், " டேய்.. தங்கம்.. இதெல்லாம் தப்புடா, அப்படியெல்லாம் எதுவும் இல்லைடா.. எல்லாரும் சமம்டா" என்று எடுத்துக் கூறினார்.
அனைவரும் சமம்: இந்த இளைஞர் இன்று அதாவது, மே 11ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் முன்பு பேசியது தவறு, முன்பு நடந்து கொண்டது தவறு, அப்படி யாரும் இருக்க கூடாது. நான் இப்போது நடந்து வரும்போது பி.ஜி.எம் சேர்த்து வீடியோக்கள் வெளியிடுவதில்லை. அனைவரும் பிறப்பால் சமம் என்று தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், நான் அன்று அவ்வாறு பேசும்போது, எதிரே அமர்ந்திருந்த அக்கா ஒருவர் எனக்கு மிகவும் தெளிவாக எடுத்துச் சொன்னார். அந்த அக்காவுக்கு நான் இப்போது நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் பேசிய போது அங்கிருந்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.

பாராட்டு: இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள் மற்றும் நீயா நானா ரசிகர்கள், நீயா நானா நிகழ்ச்சியின் மொத்த குழுவினரையும் பாராட்டி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், பல இணையவாசிகள் அந்த இளைஞரின் புரிதலுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் அன்றைக்கு காமெடியா தெரிஞ்ச பையன், இன்றைக்கு அழகா தெரியுறான். ஆண்ட பரம்பரை என்று பேசிக் கொண்டிருந்த ஒருவனை பிறப்பால் அனைவரும் சமம் என்று புரியவைத்து அந்த இளைஞனை சிறந்தவனாக மாற்றிய நீயா நானா விற்கும் நிகழ்ச்சியை எப்போதும் வெகு சிறப்பாக தொகுத்து வழங்கும் கோபிநாத்திற்கும் வாழ்த்துகள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











