கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு போக முடியும்.. கேப்டனின் குருபூஜைக்கு போக முடியாதா? ரசிகர்கள் கேள்வி!
சென்னை: தேமுக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விஜய்காந்தின் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தேமுக சார்பில் நேற்று குருபூஜையில் கலந்து கொள்ளும் படி விஜய்க்கு அழைப்பு கொடுத்தும் அவர் கலந்து கொள்ளாதது குறித்து இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28ந் தேதி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம்

நேற்று அனுசரிக்கப்பட்டது. விஜயகாந்தின் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
நினைவிடத்தில் அஞ்சலி: இதேபோல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை குருபூஜையாக அனுசரித்தனர். இதற்காக அனைத்து அரசியல் பிரபலங்களுக்கு விஜய்காந்தின் மகன் விஜயபிரபாகரன், சுதீஷ் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்க்கு நேரில் அழைப்பு கொடுத்திருந்தார்.

சரமாரி கேள்வி: இந்நிலையில், கேப்டனின் நினைவு தினத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், விஜய் அஞ்சலி செலுத்தவும் வரவில்லை, குறைந்தபட்சம் ஒரு அறிக்கைக்கூட வெளியிடவில்லை இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டுமில்லாமல் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. அண்மையில் நடிகர் விஜய், கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொண்டதை குறிப்பிட்டு, கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு மட்டும் போக முடியும்... கேப்டனின் நினைவு தினத்திற்கு வரமுடியாதா என்றும், கேப்டன் விஜய்காந்த் மட்டும் இல்லை என்றால், இன்று விஜய் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள் விஜய், என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











