இதனால தான் அவங்கள உள்ளே விடல.. ரோகிணி தியேட்டர் சொன்ன விவகாரமான விளக்கம்.. விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க ஆசையோடு டிக்கெட் எடுத்துக் கொண்டு தியேட்டருக்கு குழந்தைகளுடன் வந்திருந்த நரிக்குறவ மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்காமல் ரோகிணி தியேட்டர் ஊழியர் தடுத்தது மட்டுமின்றி அவர்களை இழிவாக நடத்திய வீடியோ காட்சிகளை ரசிகர்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.
அதான் டிக்கெட் இருக்குல்ல அவங்களை உள்ளே விடுங்க என ரசிகர்கள் குரல் கொடுத்தும் அந்த நபர் பத்து தல படத்தை பார்க்க அவர்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
உடனடியாக ரசிகர்கள் ரோகிணி ஓனருக்கு டேக் செய்து விஷயத்தை சோஷியல் மீடியாவில் தீயாக பரவ விட்ட நிலையில், அவர்களை படம் பார்க்க அனுமதித்த ரோகிணி நிர்வாகம் முதலில் ஏன் தடுத்தோம் என்பதற்கு ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளனர்.

அனுமதி மறுப்பு
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சென்னை ரோகிணி தியேட்டரில் படத்தை பார்க்க வந்த நரிக்குறவ இன மக்களை உள்ளே அனுமதிக்காமல் அதன் ஊழியர் தடுத்து நிறுத்தி அவர்களை மரியாதைக்குறைவாக நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தியேட்டரில் தீண்டாமை
சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வேகமாக பரவியதும் அதை பார்த்த பல பிரபலங்களும், தியேட்டரில் இப்படியொரு தீண்டாமை கொடுமை அதிலும் தமிழ்நாட்டில் நடக்குதா? என விளாசி வருகின்றனர். அந்த ஊழியர் அவங்களும் மனுஷங்கதான் என்பதை மறந்து விட்டு நடந்தது ரொம்ப தப்பு என விளாசி வருகின்றனர்.

ரோகிணி நிர்வாகம் விளக்கம்
இந்நிலையில், ரோகிணி நிர்வாகம் இது தொடர்பாக ஒரு அடடா விளக்கத்தை போட்டுள்ளது. பத்து தல திரைப்படம் யுஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 2 முதல் 10 வயது குழந்தைகளுடன் வந்தவர்களைத் தான் எங்கள் ஊழியர் தடுத்து நிறுத்தினார். ஆனால், இந்த விஷயத்தை சென்சிடிவ் பிரச்சனையாக மாற்ற சிலர் நினைத்த நிலையில், அவர்களை தியேட்டரில் படம் பார்க்க அனுமதித்துள்ளோம் என வீடியோவையும் ஷேர் செய்துள்ளனர்.

படம் பார்க்கும் வீடியோ
பத்து தல படத்தை தியேட்டரில் சீட்டில் அமர்ந்து சும்மா ஜம்முன்னு முதலில் தடை செய்யப்பட்ட மக்கள் ரசிகர்களின் போராட்டத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டு பார்த்து வரும் வீடியோவையும் ரோகிணி நிர்வாகம் ஷேர் செய்துள்ளது. ரோகிணி தியேட்டர் விளக்கம் ஒரு சப்பைக் கட்டு என்றும் இதுவும் விவகாரமான விளக்கம் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

விவகாரமான விளக்கம்
தங்கள் தவறை ஒத்துக்கொள்ளாது ரோகிணி நிர்வாகம் இப்படியொரு விவகாரமான விளக்கத்தை கொடுத்துள்ளது என நெட்டிசன்கள் ரோகிணி தியேட்டரை மீண்டும் திட்டித் தீர்த்து வருகின்றனர். பெற்றோர்கள் அனுமதியுடன் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் படத்தை பார்க்கலாம் என்று தான் சட்டம் சொல்கிறது என்று பதிவிட்டு அந்த விளக்கத்தையும் விளாசி வருகின்றனர்.

நல்லா உருட்டு
மற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் பத்து தல படத்தை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பார்த்து வரும் நிலையில், ரோகிணி தியேட்டர் இப்படியொரு உருட்டு உருட்டியுள்ளதே என நெட்டிசன்கள் அவர்களின் விளக்கத்திலேயே விஷமம் இருப்பதாக கூறி கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











