Vijay: என்ன கொடுமை சார் இது.. விஜய்க்கு வாழ்த்து சொல்றேன்னு நெட்டிசன்களிடம் பல்பு வாங்கிய பிரேம்ஜி
சென்னை: இணையத்திற்குள் நுழைந்தாலே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான செய்திகள்தான் டன் கணக்கில் குவிகின்றது. நாளை மாநாடு நடைபெறவுள்ள நிலையில் விஜய் தனது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் திரைத்துறையில் இருந்து பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் பிரேம்ஜியும் சிறப்பு டி.பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் விஜய் தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டினை நாளை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி நடத்தவுள்ளார். இதற்கன ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்தே வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. மாநாடு ஏற்பாட்டுப் பணிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் அங்கு வைக்கப்பட்ட கட் - அவுட்களை இணையவாசிகள் பாராட்டினர். குறிப்பாக வேலுநாட்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருக்கு கட் -அவுட் வைத்தது எல்லாம் இணையவாசிகள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோதே திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். நாளை முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் திரைத்துறையினர் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், "அண்ணன் தளபதி விஜய் தொடங்கியுள்ள மிக நீண்ட பயணம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். நீங்கள் எப்போதும் எங்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளீர்கள். உங்களுக்கு எங்களிடமிருந்து சிறிய அன்பளிப்பு" என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு கோட் படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள, 'உன் பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு' என்ற வரிகள் திரும்பத் திரும்ப வருவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வேகமாக பரவி வரவேற்பைப் பெற்றது.

வீடியோ: அதேபோல் இயக்குநர் மோகன்ராஜா விஜய்யை வைத்து தான் இயக்கிய வேலாயுதம் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 13ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்தும் , நாளை விஜய்யின் தவெக மாநாடு நடைபெறவுள்ளதாலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்தினார். வேலாயுதம் படத்தில் விஜய் பேசும் வசனமான, " 5 வருசத்துக்கு ஒருமுறை கோபத்தை காட்டினால் ஆட்சி மாற்றம் வருதில்ல, அப்பப்ப காட்டிப்பாருங்க அரசியல் மாற்றமே வரும்" எனப் பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

கவர் டி.பி: இவர்கள் எல்லாம் வீடியோ வெளியிட்டு வாழ்த்த, நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான, பிரேம்ஜி விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கென சிறப்பு கவர் டி.பி வடிவமைத்து வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதனைப் பார்த்த இணையவாசிகள், பிரேம்ஜி பாட்டில் பிழை உள்ளது என்ற தொணியில் கவர் டி.பி.,யில் உள்ள பிழைகள் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கமெண்ட்: அதாவது பிரேம்ஜி வெளியிட்டுள்ள கவர் டி.பி.,யில் பிறப்பொக்கும் என்பதற்கு பதிலாக பிறப்புக்கும் என உள்ளது. மேலும் "வரலாறு பேசும் " தளபதியின் " - #தமிழகவெற்றிக்கழகம் மாநில மாநாடு முன்னிட்டு சிறப்பு CDP வெளியிடுகிரேன்" எனவும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார். அதாவது வெளியிடுகிறேன் என இருப்பதற்கு பதிலாக வெளியிடுகிரேன் என இருப்பதாகவும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











