பேரரசே பழைய மோகன் ஜிதான்ப்பா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன் ஜிதான் உண்மையான கலைஞர் என இயக்குநர் பேரரசு புகழ்ந்திருக்கிறார். அதனையடுத்து அவரை பலரும் ட்ரோல் செய்துவருகின்றனர்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அந்தப் படம் பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் அடுத்ததாக திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கினார் மோகன் ஜி.

விவாதத்தை கிளப்பிய திரௌபதி
மோகன் ஜியின் முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் எந்த அளவுக்கு சைலெண்ட் மோடில் இருந்ததோ திரௌபதி அதைவிட அதிக சத்தத்தை எழுப்பியது. படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மோகன் ஜி வன்மத்தோடு தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.

திரௌபதிக்கு அடுத்ததாக ருத்ரதாண்டவம்
இரண்டாவது படமான திரௌபதி இப்படி பல பேச்சுக்களையும், விமர்சனங்களையும் எழுப்பியது. இதனையடுத்து அவர் ருத்ரதாண்டவம் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் மோகன் ஜி விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனையும் நேரடியாக விமர்சானம் செய்திருக்கிறார். மோகன் ஜி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை திருப்திபடுத்தவும், ஒரு கட்சியை திருப்திப்படுத்தவும்தான் படம் எடுக்கிறார் என பலர் வெளிப்படையாகவே கூறினர்.

பகாசூரன் எடுத்திருக்கும் மோகன் ஜி
இப்படி படத்துக்கு படம் பரபரப்பையும், விமர்சனங்களையும் கிளப்பும் மோகன் ஜி தற்போது பகாசூரன் படத்தை இயக்கியிருக்கிறார் இதில் செல்வராகவன், நட்டி, ராதாரவி, உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பெண்கள் சந்திக்கும் பிரச்னையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாக பகாசூரன் படக்குழுவும், மோகன் ஜியின் ரசிகர்களும் கூறுகின்றனர். அதேசமயம் படம் மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இயக்குநரை புகழ்ந்த பேரரசு
இந்நிலையில் பகாசூரன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்டோருக்கு திரையிடப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு, "மோகன் ஜியின் முந்தைய படங்கள் ஒரு சார்பில் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்தப் படம் மக்களையும், பெற்றோரையும் சார்ந்த படம். முக்கியமாக பெண் குழந்தைகளுக்கான படம். மொத்தத்தில் இது சமூகத்தை சார்ந்த படம். யார் பொறுப்புடன் படம் எடுக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான கலைஞன். அப்படி மோகன் ஜி உண்மையான கலைஞன்" என்றார்.

இயக்குநர் பேரரசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
இதனையடுத்து பேரரசுவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஒருதரப்பினர் கண்டனம் தெரிவித்துவருவதுடன் பேரரசுவை ட்ரோல் செய்தும் வருகின்றனர். பெண்கள் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவதுதான் அனைத்து தவறுகளுக்கும் காரணம் என்கிற டோனில் படம் இருக்கிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்கள்தான் நடந்த தவறுக்கு காரணம் என சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை. அப்படி எடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு பேரரசு எப்படி பாராட்டு தெரிவிக்கலாம் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மற்றொரு தரப்பினர் சிவகாசி படத்தில் அசினின் உடை குறித்து விஜய் பேசும் காட்சியை எடுத்து, "பேரரசே பழைய மோகன் ஜிதான். அதனால் அவருக்கு பகாசூரன் படம் பிடித்துப்போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை" எனவும் ட்ரோல் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











