Coolie: ஏ.ஆர். ரகுமானிடம் இருந்து கூலி பாட்டு காப்பியா.. அனிருத்தை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளராக கருதப்படுபவர் அனிருத். இவர் ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றுவிடுகிறது. இது மட்டும் இல்லாமல், இவர் பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பவர் ஹவுஸ் பாடலை ஏ.ஆர். ரகுமானிடம் இருந்து அனிருத் காப்பி அடித்து விட்டார் என இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் ரஜினிகாந்த் உடன் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதால் படம் குறித்த அப்டேட்கள் சுவரஸ்யமான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே உள்ளது.

பவர் ஹவுஸ்: படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாடலான சிக்கிடு வைஃப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகவில்லை. ஆனால் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் கூலி படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துவிட்டது. மூன்றாவது பாடலான பவர் ஹவுஸ் பாடல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த பாடலுக்கு ரசிகர்கள் கவனம் கணிசமாக கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த பாடலில் இடையில் வரும் மெட்டு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இருந்து அனிருத் காப்பி அடித்துள்ளர் என இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.
காப்பி: அனிருத் இசையில் ஒரு பாடல் வெளியானால், இணையவாசிகள் சிலர் அனிருத் இந்த பாடலை, அந்த இசையமைப்பாளரிடம் இருந்து காப்பி அடித்துவிட்டார், வெளிநாட்டு இசையமைப்பாளரின் அந்த ஆல்பம் பாடலில் இருந்து காப்பி அடித்து விட்டார் என்று எல்லாம் விமர்சித்து வருகிறார்கள். அதாவது ஏற்கனவே பவர் ஹவுஸ் பாடலின் தொடக்கம் ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்றில் இருந்து அனிருத் காப்பி அடித்துள்ளார் என்று கூறினார்கள். இந்நிலையில் இடையில் வரும் மெட்டு, காதலர் தினம் படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்த பாடலான ஹோ மரியா பாடலில் வரும் மெட்டு போல இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
ரசிகர்கள் மோதல்: இது தொடர்பாக இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், இரண்டு பாடல்களையும் இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதற்கு, " வெளிநாட்டுல சுட்டா கேஸ் போடுறாங்கனு உள்ளூர் பாய் எதுவும் கேட்க மாட்டார்னு இங்கையே சுட்டுட்டான், நல்ல Sound Engineer இருக்கனால தப்பிச்சிட்டு வரான்" என மோசமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்கள் பலரும் காட்டமான பதிலடிகளைக் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் சிலர் அனிருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் குறிப்பாக எக்ஸ் தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரத்தில் தற்போது சாய் அபயங்கர் - அனிருத் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் இணையத்தில் நடந்து கொண்டு இருப்பதால் அதன் ஒரு பகுதியாகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











