Indian 2: இந்தியன் தாத்தா ஃபேஸ்புக் லைவில் விடாமுயற்சி அப்டேட்? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
சென்னை: உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன் 2. இந்தப் படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், திரைத்துறையினர் மத்தியிலும் இருந்தது. ஆனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது.

மேலும் பல இடங்களில் லாஜிக் செட் ஆகவில்லை, படத்தின் நீளம் அதிகமாக உள்ளது எனக் கூறினர். இதனால் படத்தின் நீளத்தில் இருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களைக் கவரும், தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே மன்னா" என்ற சினிமா வசனத்தைப்போல் ஆகிவிட்டது.

ஓடிடி ரிலீஸ்: படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து தியேட்டரைவிட்டே பெரும்பாலும் வெளியேறிவிட்டது. படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் படம் தியேட்டரை விட்டு வெளியேறிவிட்டதால் ஒருவாரம் முன்னரே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதேபோல் ஒருவாரம் முன்னதாக இன்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்தியன் 2 படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரிம் ஆகி வருகின்றது.

விடாமுயற்சி அப்டேட்: இந்நிலையில் படத்தின் பல காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக படத்தில் ரசிகர்களைக் கடுப்பாக்கிய காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ஃபேஸ்புக் லைவில் இந்தியன் தாத்தா பேசுவதைப் போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஃபேஸ் புக் லைவ் என்றாலே வழக்கமாக கமெண்ட்கள் வருவது என்பது இயல்புதான். ஆனால் அதில் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு ஒருவர் கமெண்ட் செய்துள்ளதைப் போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சரியாக கண்டுபிடித்த நெட்டிசன்கள் அதனை இணையத்தில் பகிர்ந்து இந்தியன் 2 படத்தினை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
லைகா: இந்தியன் 2 படத்தினைத் தயாரித்தது லைகா புரெடக்ஷன் நிறுவனம். அதே நிறுவனம்தான் விடாமுயற்சி படத்தினையும் தயாரித்து வருவதால், கதைக்குத் தேவை என்பதாலோ, அல்லது இந்த காட்சியில் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் குறித்த கேள்வியை யாரும் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்திலோ இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











