திரையுலகில் என்றும் உதிராத பூ: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் மகேந்திரனுக்கு பிறந்தநாள்
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி படைப்பாளராக வலம்வந்த மறைந்த இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள் இன்று.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர்களில் மகேந்திரனுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
மகேந்திரனின் இயக்கத்தில் 3 படங்களில் நடித்துள்ள ரஜினி, அவரை கொண்டாட பல காரணங்கள் உள்ளன.

சினிமா அறிமுகம்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக அனைவராலும் அடையாளம் காட்டப்படுபவர் மறைந்த இயக்குநர் மகேந்திரன். இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்தை விடவும், கதை, திரைக்கதை, வசனம் எழுதவே அதிகம் விருப்பம் கொண்டிருந்த மகேந்திரன், அதனை சிவாஜியின் 'தங்கப்பதக்கம்' படத்தில் இருந்து தொடங்கினார். இப்படத்தில் மகேந்திரனின் கதையும் வசனமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

திரைக்கதை மன்னன்
மகேந்திரனின் எழுத்தை கண்டு வியந்த இயக்குநர்களும் முன்னணி நடிகர்களும் அவர் தங்களது படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என விரும்பினர். அந்தளவிற்கு திரைக்கதையிலேயே பாத்திரங்களின் வீரியத்தை வெளிப்படுத்தியது மகேந்திரனின் எழுத்து. வாசிப்புகளில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த மகேந்திரன், தனது படைப்புகளிலும் அதன் கலை நேர்த்தி இருக்க வேண்டும் என ரொம்பவே மெனக்கெடல் செய்தார்.

முள்ளும் மலரும்
இறுதியாக அவருக்குள்ளும் இயக்குநர் ஆசை வெளிப்பட, ரஜினியை வைத்து 'முள்ளும் மலரும்' படத்தை முதல் இயக்கினார். அந்தப் படத்தில் அவர் உருவாக்கியிருந்த தன்மானமுள்ள இளைஞனான காளிக்கு நிகராக, இன்னும் ஒரு பாத்திரம் கூட தமிழ்த் திரையில் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போதும் ரஜினியின் காளி என்ற பாத்திரம் திரையில் வந்தால், பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கும்.

வியந்த ரஜினி
காளி கதாபாத்திரம் ஆஜானுபாகுவாகத் திரையில் நின்றதற்கு ஒரே காரணம், இயக்குநர் மகேந்திரன் மட்டும் தான். 'கெட்டபய சார் இந்தக் காளி' என்ற வசனம் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்திய அதிர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்காது.. அது வெறும் வசனமல்ல, தன்மானமுள்ள கிராமத்து இளைஞனின் உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு. இன்றளவும் இந்தப் பாத்திரம் போல் தனக்கு பிடித்த பாத்திரம் வேறு எதுவும் இல்லை, இதுவரை நடித்தப் படங்களிலேயே தன்னை வியக்க வைத்தது தான் என, ரஜினி அடிக்கடி சிலாகிப்பது உண்டு.

தனித்துவம்
மகேந்திரனின் தனித்துவமாக அவரது பாத்திர உருவாக்கத்தைச் சொல்லலாம். புதுமைப்பித்தனின் சிற்றன்னையில் இருந்து சுந்தரவடிவேலு என்னும் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை 'உதிரிப்பூக்களில்' அவர் மாற்றிய விதம் அக்மார்க் ரகம். அமைதியான மனிதனுக்குள் அவ்வப்போது தலைதூக்கும் கட்டுவிரியன் மனசை, அவர் திரையில் காட்டியிருந்த தன்மை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு.

புதுமைகளின் ரசிகன்
மகேந்திரனின் படங்களும் அவரது பாத்திரங்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு காரணம், அவரே தனது படைப்பின் முதல் ரசிகனாக இருந்து கை பக்குவத்துடன் சமைத்து திரையில் பரிமாறுகிறார். இதற்கு ஒரு உதாரணமாக, 'ஜானி' திரைப்படத்தில் ரஜினியிடம் ஸ்ரீதேவி காதலைச் சொல்லும் காட்சியில் தென்படும் ரசனையைக் கூறலாம். இயக்குநர் மகேந்திரனின் பேரைச் சொன்னால், இப்படி இன்னும் பல காட்சிகள் ரசிகர்களின் கண்களுக்குள் விரியும்.. தமிழ் சினிமா நன்றி கடன்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன், இன்று உயிரோடு இல்லையென்றாலும் அவரது படைப்புகள் ரசிகர்களிடம் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அதுவே இயக்குநர் மகேந்திரனின் வெற்றி!


Click it and Unblock the Notifications











