இப்படி மிதிக்கணும்... அருண் விஜய்யின் 'சினம்'-படத்துக்காக 2 மாதம் ஆக்ஷன் பயிற்சி
சென்னை: அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தின் சண்டைக் காட்சிக்காக, புதுமுகங்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய், நடிக்கும் சினம் படத்தை இயக்கி வருகிறார் ஜி.என்.ஆர். குமரவேலன். இவர் இதற்கு முன், நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் உட்பட சில படங்களை இயக்கியவர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசை அமைக்கிறார்.

மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பாக விஜயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில், வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய். அவர் ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்னம் கடந்த மாதம் வெளியிட்டார்.
இந்தப் படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் ஆக்ஷன் காட்சிகளை எடுக்க உள்ளனர். ஸ்டன்ட் சில்வாவும் அருண் விஜய்யும் இதில் மோதுகின்றனர். அவர்களோடு படத்தில் நடிக்கும் சில புதுமுகங்களும் மோதுகின்றன.
இதை வழக்கமான ஆக்ஷன் காட்சிகளாக இல்லாமல் யதார்த்தமான காட்சிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, சண்டைக் காட்சியில் பங்குபெறும் அந்த புதுமுகங்களுக்கு கடந்த 2 மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











