Vetrimaaran - விஜய் சேதுபதியை பாடாய் படுத்தும் வெற்றிமாறன்? .. மீண்டும் மீண்டுமா
சென்னை: Viduthalai 2 (விடுதலை 2) வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை படம் வந்தது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருந்தார் வெற்றிமாறன். இளையராஜா இசையமைத்திருந்தார். படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். குறிப்பாக வெற்றிமாறன் ஏதோ டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிவிட்டது போல் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.

விடுதலை 2: விடுதலை படத்தை சிறிய படமாக ஒரே பாகத்தில் முடித்துவிடத்தான் வெற்றிமாறன் திட்டமிட்டிருந்தார். ஆனால் கதையின் தீவிரத்தை குறைக்க விரும்பாத அவர் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார். விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே மூச்சாக ஷூட் செய்து முடித்தார். ஆனால் முதல் பாகத்துக்கு கிடைத்த விமர்சனம் இரண்டாம் பாகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனம் வைத்து மீண்டும் ஷூட்டிங்கை ஆரம்பித்திருக்கிறார்.
மஞ்சு வாரியர்?: முதலில் ஷூட் செய்து முடித்தபோது விஜய் சேதுபதிக்கு ஜோடி யாரும் இல்லை. இந்தச் சூழலில் தற்போது அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியரை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்திருந்தார். படத்தின் ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மும்முரமாக நடந்துவருகிறது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
மறுபடியும் முதல்லேர்ந்தா?: சூழல் இப்படி இருக்க விடுதலை 2 குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, 30 நாட்கள் ஷூட்டிங் என்ற ஷெட்யூலை போட்டுவிட்டு சூரி விஜய் சேதுபதி உள்ளிட்டோரை அழைத்து சென்றிருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் 15 நாட்களிலேயே இறங்கி வந்திருக்கிறார். அதற்போது இன்னும் 50 நாட்கள் ஷூட்டிங் நடத்த அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடந்தது: ஏற்கனவே விடுதலை படத்தின் முதல் பாக ஷூட்டிங்கின்போது 15 நாட்கள் மட்டும் கால்ஷீட் போதும் என்றுதான் விஜய் சேதுபதியை அழைத்தார் வெற்றிமாறன். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மாதக்கணக்கில் விஜய் சேதுபதி போர்ஷனை ஷூட் செய்தார். இதனை விஜய் சேதுபதியே விடுதலை முதல் பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். தற்போது மீண்டும் அதேபோல் வெற்றிமாறன் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
என்ன காரணம்?: விடுதலையை பொறுத்தவரை சூரிதான் ஹீரோ என்றாலும் விஜய் சேதுபதிதான் கதையின் மையமாக இருக்கிறார். முதல் பாகத்தில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும் இரண்டாவது பாகத்தில் நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும். அதன் காரணமாகத்தான் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழல் உருவாகிவிட்டதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications











