ரூ 15 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட படங்கள் இந்த பத்து நாட்களில் மட்டுமே வெளியாக வேண்டும்!
சென்னை: ரூ 15 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்படும் அனைத்துப் படங்களும் பெரிய படங்களே. இவை ஆண்டில் 10 விசேஷ தினங்களில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
பெரிய பட்ஜெட் படங்கள் வரவால் சிறிய படஜெட் படங்கள் பாதிக்கப்படுவதால் தயாரிப்பாளர் சங்கம் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளது.
சிறிய முதலீட்டு படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிரமத்தையும், அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பையும் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரிய படங்கள்
அதில், "ரூ.15 கோடி மற்றும் அதற்கு அதிக பொருட்செலவில் தயாராகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும்.

எந்தெந்த நாட்கள்?
அவை...
ஜனவரியில் பொங்கல், குடியரசு தினம்.
ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு, மே தினம், ஆகஸ்டில் சுதந்திர தினம், செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, ரம்ஜான், டிசம்பரில் கிறிஸ்துமஸ் ஆகிய பத்து நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும்.

விரும்பும் தினங்களில்
15 கோடிக்கு கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் விரும்பும் எந்தவொரு நாட்களிலும் வெளியிட்டுக் கொள்ளலாம்.

ஜூன் 1 முதல்
இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது," என்று கூறியுள்ளார்.

சாத்தியமா?
இது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதில்லை. அதிக அரங்குகள் தேவைப்படுவதாலும், பெரிய படங்கள் மோதுவதால் வருவாய் இழப்பு ஏற்படுவதாலும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஏற்பார்களா?
இப்போது பத்து நாட்களில்தான் வெளியாக வேண்டும் என்று பெரிய படங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை, ஹீரோக்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர் எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்பது இனிதான் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











